நாளை திருச்சி வரும் விஜயை நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவின் அடுத்த விக்கெட்!அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Will Vijayabaskar meet Vijay in person who is coming to Trichy tomorrow AIADMK next wicket Excitement in political circles
2026 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக முதல்வர் ஜோசப் விஜய், அத்தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாளை திருச்சிக்கு வருகிறார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுக்கூட்ட வடிவில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில், தேர்தலில் தமக்கு ஆதரவு அளித்த வாக்காளர்களுக்கு முதல்வர் விஜய் நேரில் நன்றி தெரிவிக்க உள்ளார். ஆனால், இந்த வருகையைச் சுற்றி அரசியல் ரீதியாக மற்றொரு முக்கிய விவாதமும் எழுந்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர், முதல்வர் விஜய்யை சந்திக்கக்கூடும் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த சில வாரங்களாக அதிமுக தலைமை மீதான அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் விஜயபாஸ்கர், எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் தவெகவில் இணையக்கூடும் என்ற ஊகங்களும் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் விராலிமலை முருகன் கோயிலில் நடைபெற்ற வைகாசி விசாகத் தேரோட்ட விழாவில், தவெக அரசின் அமைச்சரான முகமது பர்வேஸ் உடன் விஜயபாஸ்கர் இணைந்து பங்கேற்றது கவனத்தை ஈர்த்தது. இருவரும் சேர்ந்து தேரோட்டத்தை தொடங்கி வைத்த புகைப்படங்கள் மற்றும் காட்சிகள் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தன.இதனால், விஜயபாஸ்கரின் அடுத்தகட்ட அரசியல் முடிவு குறித்து மேலும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்தத் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
அந்த சூழலில், தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக விஜய் நேரில் வருவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விஜயபாஸ்கர் முதல்வர் விஜய்யை சந்திப்பார் என்ற தகவலுக்கு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை. எனினும், இருவரும் சந்திக்கும் சூழல் ஏற்பட்டால், அது தேர்தலுக்குப் பிந்தைய தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக அமையக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அதிமுகவில் இருந்து பல்வேறு முக்கிய நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளை நோக்கி நகர்வதாக கூறப்படும் நிலையில், திருச்சியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
English Summary
Will Vijayabaskar meet Vijay in person who is coming to Trichy tomorrow AIADMK next wicket Excitement in political circles