என்டிஏ கூட்டணி அமைக்கும் தவெக? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு!
Will Tvk form NDA alliance 98 Tvk district secretaries support Vijay decision to take
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எந்த அரசியல் நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த சூழலில், என்டிஏ கூட்டணியில் சேர்வது குறித்து தவெக மாவட்டச் செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் மொத்தம் 132 மாவட்டச் செயலாளர்களில் 120 பேர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் முதலில் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாகவும், பின்னர் கடைசி கட்டத்தில் கூட்டணி குறித்து கருத்து கேட்கப்பட்டதாகவும் தகவல்.
அப்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாமா? அல்லது தனித்து போட்டியிடலாமா? என்ற கேள்வி மாவட்டச் செயலாளர்களிடம் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பங்கேற்ற 120 பேரில் 98 மாவட்டச் செயலாளர்கள் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இறுதி முடிவு எதுவாக இருந்தாலும் விஜய் எடுக்கும் முடிவுக்கு முழு ஆதரவு அளிப்போம் எனவும் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் கடந்த சில நாட்களாகவே பாஜக தரப்பில் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆந்திரா மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் விஜய்யின் நண்பர் விஷ்ணு ரெட்டி ஆகியோரின் மூலம் இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், பாஜகவை தன் “கொள்கை எதிரி” என்று விஜய் முன்பே அறிவித்திருந்ததால், தற்போது அந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதே நேரத்தில், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே கடைசி நேரத்தில் தவெக–பாஜக கூட்டணி உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த கூட்டணியில் துணை முதல்வர் பதவி மற்றும் சுமார் 60 தொகுதிகள் விஜய்க்கு வழங்கப்படும் என்ற பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், மாவட்டச் செயலாளர்களின் பெரும்பான்மையான ஆதரவு கிடைத்துள்ள நிலையில் விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றுவாரா? என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது.
English Summary
Will Tvk form NDA alliance 98 Tvk district secretaries support Vijay decision to take