தர்மயுத்தம் 2.0க்கு காரணம் யார்? தொடங்கியது எப்படி?மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய ஓபிஎஸ்!
Who is responsible for Dharmayuttam 2 How did it start OPS alleges allegations against Manoj Pandian and Vaithilingam
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியிட்டுள்ள கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளன. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தனது ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய ஓபிஎஸ், “தர்மயுத்தம் 2.0” தொடங்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோரையே சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், ஓபிஎஸ் நீண்ட காலமாக எந்தத் தெளிவான அரசியல் முடிவையும் எடுக்காமல் தாமதித்து வந்ததாலேயே, அவரது அணியில் இருந்த பல முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியடைந்து திமுகவில் இணைந்ததாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. மருது அழகுராஜ், மனோஜ் பாண்டியன், சுப்புரத்தினம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்தனர். மேலும், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த ராஜ்யசபா உறுப்பினர் தர்மரும் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) அணிக்கு சென்றார். இதனால் தற்போது வெல்லமண்டி நடராஜன் மற்றும் உசிலம்பட்டி ஐயப்பன் ஆகிய இருவர் மட்டுமே ஓபிஎஸ் உடன் இருப்பதாக சொல்லப்படுகிறது.
பெரியகுளத்தில் பேசிய ஓபிஎஸ், “சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. தனிக்கட்சி தொடங்கும் எண்ணமும் இல்லை. அதிமுகவை மீட்பதற்காகவே சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களைப் பார்த்தால் பாவமாக இல்லையா?” என கேள்வி எழுப்பினார். மேலும், ஒருகாலத்தில் எதிரெதிராக இருந்த டிடிவி தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒன்றிணைந்துவிட்ட நிலையில், “நானும் ஒன்றிணைய ரெடி. ஆனால் அவர்கள் இருவரும் ரெடியா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஆனால், தர்மயுத்தம் 2.0க்கு மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கமே காரணம் என ஓபிஎஸ் குற்றம்சாட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது, இபிஎஸ் தரப்பினர் ஓபிஎஸ்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ், ஏ-ஃபார்ம், பி-ஃபார்ம் கையெழுத்து அதிகாரத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்ற பிடிவாதத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் விளைவாக பொதுக்குழுவை எதிர்த்து அவர் நீதிமன்றத்தை நாடினார்.
அரசியல் விமர்சகர்கள் கூறுவதுபோல், அந்தக் கட்டத்தில் ஓபிஎஸ் ஒப்பந்தத்திற்கு சம்மதித்திருந்தால், அதிமுக பிரிந்து போக வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது. பொதுக்குழு விவகாரமே தர்மயுத்தம் 2.0க்கு அடித்தளமாக அமைந்ததாக பலர் கருதுகின்றனர். இந்நிலையில், தற்போது திமுகவில் இணைந்துவிட்ட மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் மீதே குற்றம் சாட்டுவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம், அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் ஓபிஎஸ், ஏதாவது ஒரு வழியில் மீண்டும் அதிமுகவுடன் இணைவதற்கான முயற்சியில் இருப்பதாகவும், அதற்கான அடித்தளமாகவே இத்தகைய கருத்துகளை அவர் வெளியிட்டு வருகிறார் என்றும் அரசியல் விமர்சகர்கள் மதிப்பிடுகின்றனர்.
English Summary
Who is responsible for Dharmayuttam 2 How did it start OPS alleges allegations against Manoj Pandian and Vaithilingam