சென்னையில் புதிய தலைமைச் செயலகம் எங்கே? பட்டினப்பாக்கம், கிண்டி, நந்தம்பாக்கம், கோயம்பேடு.. 4 இடங்கள் பரிசீலனை!
Where will the new Secretariat in Chennai be located four locations are under consideration
சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்டினப்பாக்கம், கிண்டி, நந்தம்பாக்கம் மற்றும் கோயம்பேடு ஆகிய 4 இடங்கள் தற்போது முக்கியமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய், விதி எண் 110-ன் கீழ் தலைமைச் செயலகம் தொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவையில் வெளியிட்டிருந்தார். அப்போது அவர், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை சுமார் 400 ஆண்டுகளாக தமிழக அரசின் நிர்வாக மையமாகவும், ஆட்சிப் பாரம்பரியத்தின் அடையாளமாகவும் விளங்கி வருவதை சுட்டிக்காட்டினார்.
புனித ஜார்ஜ் கோட்டை வளாகம் மொத்தம் 107 ஏக்கர் பரப்பளவு கொண்டிருந்தாலும், தமிழக அரசின் தலைமைச் செயலக பயன்பாட்டுக்காக சுமார் 4 ஏக்கர் மட்டுமே உள்ளது என்றும், மீதமுள்ள நிலப்பகுதிகள் பாதுகாப்புத் துறை மற்றும் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், வளாகத்தை விரிவுபடுத்துவதிலும் மேம்படுத்துவதிலும் கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
தற்போது தலைமைச் செயலகம் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் நாமக்கல் கவிஞர் மாளிகை உள்ளிட்ட கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. 1978-ம் ஆண்டு கட்டப்பட்ட நாமக்கல் கவிஞர் மாளிகையில் 30-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளைச் சேர்ந்த செயலாளர்கள், அதிகாரிகள் மற்றும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த பல ஆண்டுகளில் அரசுத் துறைகளின் எண்ணிக்கையும், பணியாளர்களின் எண்ணிக்கையும், நிர்வாகப் பொறுப்புகளும் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய தலைமைச் செயலக கட்டமைப்புகள் அதற்கேற்ப விரிவுபடுத்தப்படாமல் இருப்பதால் இடப்பற்றாக்குறை உள்ளிட்ட நிர்வாக சிக்கல்கள் இருப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு, அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்துக்குள் கொண்டு வரும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த புதிய தலைமைச் செயலகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய வளாகத்தில் சட்டப்பேரவையும் இடம்பெறும் வகையில் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ.1,200 கோடி மதிப்பில் கட்டிடங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.
இதற்கான இடத்தை தேர்வு செய்யும்போது நிலத்தின் பரப்பளவு மட்டுமின்றி, போக்குவரத்து வசதி, பாதுகாப்பு, எதிர்காலத்தில் கூடுதல் கட்டிடங்களை அமைப்பதற்கான வாய்ப்பு, சுற்றுச்சூழல் விதிமுறைகள் மற்றும் சட்டரீதியான சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் பகுதியில் சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு அருகில் இருப்பது இந்த இடத்தின் முக்கிய சாதகமாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், கடலோரப் பகுதியில் கட்டிடங்கள் அமைப்பது தொடர்பான விதிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுப்பாடுகள் இருப்பதால், அவை குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் சுமார் 35 ஏக்கர் நிலம் இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர, கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியிலும் கணிசமான நிலப்பரப்பு இருப்பதால், கிண்டி பகுதி முக்கியமான தேர்வாக கருதப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையின் பல்வேறு பகுதிகளுடன் சாலை மற்றும் பொதுப் போக்குவரத்து இணைப்பு இருப்பது கிண்டிக்கு கூடுதல் சாதகமாக பார்க்கப்படுகிறது. மேலும், எதிர்காலத்தில் நிர்வாக வளாகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
நந்தம்பாக்கம் பகுதியில் 20 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்துக்கு அருகில் இருப்பதுடன், தெற்கு மற்றும் மேற்கு சென்னையில் இருந்து எளிதாக அணுகக்கூடிய பகுதியாக இருப்பது இதன் முக்கிய சாதகமாக பார்க்கப்படுகிறது.
அதேவேளை, நந்தம்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் தொழில் நிறுவனங்கள் அதிகம் இருப்பதால், எதிர்கால போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களும் அதிகாரிகளின் ஆய்வில் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.
கோயம்பேட்டில் உள்ள பழைய பேருந்து நிலையப் பகுதி சுமார் 36 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக கூறப்படுகிறது. பெரிய நிலப்பரப்பு, மெட்ரோ ரெயில் வசதி மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளுடன் உள்ள சாலை இணைப்பு ஆகியவை இந்த இடத்தின் முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கோயம்பேடு சென்னையின் முக்கியமான போக்குவரத்து மையங்களில் ஒன்றாக இருப்பதால், தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வந்து செல்வதற்கு வசதியாக இருக்குமா என்பதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நான்கு இடங்களிலும் தேவையான நிலப்பரப்பு, போக்குவரத்து வசதி, பாதுகாப்பு மற்றும் எதிர்கால விரிவாக்கத்துக்கான வாய்ப்புகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதில் கிண்டி மற்றும் பட்டினப்பாக்கம் பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தலைமைச் செயலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இருப்பினும், அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
புதிய தலைமைச் செயலகம் சென்னையின் எந்த பகுதியில் அமையப்போகிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ முடிவு வெளியாகும் வரை, இந்த 4 இடங்களிலும் போட்டி தொடரும் சூழல் உருவாகியுள்ளது.
English Summary
Where will the new Secretariat in Chennai be located four locations are under consideration