தவெகவில் இணைவது எப்போது? திறக்காத பனையூர் கேட்! வேதனையில் விஜயபாஸ்கர்! போனை போட்ட எடப்பாடி?
When will he join TVK The Panaiyur gate remains closed Vijayabaskar in distress Did Edappadi make the call
சென்னை: அதிமுகவில் இருந்து விலகி, விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய முயற்சித்து வருவதாக கூறப்படும் நிலையில், அவரது கட்சி இணைப்பு இன்னும் உறுதியாகாததால் அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, சி. விஜயபாஸ்கர் முதலில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் கட்சியிலிருந்தும் விலகினார். அதன் பிறகு திமுக மற்றும் தவெக ஆகிய இரு தரப்பினருடனும் அவர் தொடர்பில் இருந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
ஆரம்பத்தில் திமுகவில் இணைய முயற்சி மேற்கொண்டதாக கூறப்பட்டாலும், பின்னர் அவரது கவனம் முழுவதும் தவெக பக்கம் திரும்பியதாக தகவல்கள் வெளியாகின. விராலிமலை இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக மீண்டும் போட்டியிட வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், சி. விஜயபாஸ்கரை கட்சியில் சேர்ப்பது குறித்து தவெக தலைமையில் ஒருமித்த கருத்து இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மூத்த ஆலோசகர்கள், அவர் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை சுட்டிக்காட்டி, கட்சியில் சேர்ப்பதில் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
மறுபுறம், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் மூலம் விஜயபாஸ்கர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூன் 29-ஆம் தேதி அவர் தவெகவில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்வர் விஜய் முன்னிலையில்தான் இணைய வேண்டும் என்ற விருப்பத்தை விஜயபாஸ்கர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் முதல்வர் விஜய் பங்கேற்றதால், திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. பின்னர் ஜூலை 2-ஆம் தேதிக்கு புதிய தேதி கோரப்பட்டதாக கூறப்பட்டாலும், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இதனால், விஜயபாஸ்கரின் தவெக இணைப்பு மீண்டும் தள்ளிப்போயுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதனுடன், தனியாக கட்சியில் சேராமல், அதிமுகவில் தன்னுடன் நெருக்கமாக உள்ள சில முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களையும் தவெகவிற்கு அழைத்து செல்லும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகமும் தவெகவில் இணையக்கூடும் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. சமீபத்தில் அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டபோதும், அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படாததால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சி.வி. சண்முகம் கட்சியை விட்டு வெளியேறாமல் தடுக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், அவருடன் தொடர்பு கொள்ள முயன்றதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இருப்பினும், இந்த தகவல்கள் குறித்து எந்த தரப்பிலும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.
இந்நிலையில், சி. விஜயபாஸ்கரின் தவெக இணைப்பு எப்போது நடைபெறும், சி.வி. சண்முகத்தின் அடுத்த அரசியல் முடிவு என்ன என்பது அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து கவனிக்கப்படும் விவகாரமாக உள்ளது.
English Summary
When will he join TVK The Panaiyur gate remains closed Vijayabaskar in distress Did Edappadi make the call