தகுதியானவர்களின் பெயர்களை கண்டிப்பாக நீக்கமாட்டோம்...! - தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் விளக்கம்
We will Not Remove Names Eligible Persons Election Official gnyanesh kumar Clarifies
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடைபெற்று வரும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இரண்டு நாட்கள் ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தின் தேர்தல் நிலைமை குறித்து பல முக்கிய கருத்துகளை பகிர்ந்தார்.

அப்போது அவர் தெரிவிக்கையில், “மேற்கு வங்காளத்தில் ஜனநாயக நடைமுறை மிகவும் வலுவாக செயல்பட்டு வருகிறது. இங்கு வாக்குப்பதிவு சதவீதம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. வாக்காளர்களும் பொதுமக்களும் அரசியலமைப்பை மதித்து செயல்படுகிறார்கள்.
வன்முறையற்றதும் அச்சமற்றதுமான சூழலில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்வதே தேர்தல் ஆணையத்தின் முக்கிய குறிக்கோள். அதற்காக சட்ட அமலாக்க அமைப்புகள் முழுமையான நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றும், மாநில எல்லைகளுக்குள் சட்டவிரோதமாக பணமும் மதுபானங்களும் நுழையாதபடி கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
இதற்கிடையில், வாக்காளர் பட்டியலின் சிறப்பு திருத்தப் பணிகள் தொடர்பாக மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றுக்கு இடையே கடும் அரசியல் மோதல்கள் ஏற்பட்டன. இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்திலும் வாதப்பிரதிவாதங்கள் தீவிரமாக நடைபெற்றன.
இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “அரசியலமைப்பு விதிகளின் அடிப்படையில் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த செயல்முறையின் நோக்கம் வாக்காளர் பட்டியல் முழுமையாகத் துல்லியமாகவும் சுத்தமாகவும் இருப்பதை உறுதி செய்வதாகும். தகுதி பெற்ற வாக்காளர்களின் பெயர்கள் எக்காரணம் கொண்டும் நீக்கப்படமாட்டாது.
அதே நேரத்தில் தகுதி இல்லாதவர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறாததையும் தேர்தல் ஆணையம் உறுதி செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
We will Not Remove Names Eligible Persons Election Official gnyanesh kumar Clarifies