வாக்கரசியலுக்காக கூட பட்டியல் சமூக மக்களின் பிரச்சினைகளுக்கு செவி கொடுக்க மறுக்கிறது தமிழக அரசு - ரஞ்சித் ஆவேசம்!
pa ranjith condemn to dmk govt
அட்டகத்தி இயக்குனர் பா ரஞ்சித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மானாமதுரையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷ் (26) கடந்த (06.03.2026) அன்று காவல்துறையினரால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். கொலை நடந்து மூன்று நாட்கள் ஆகியும் இப்போது வரை சம்மந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருக்கிறது அரசும் காவல்துறையும். 4 ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள் என்பது சாதாரணமாக கடந்துபோகக் கூடிய ஒன்றல்ல என மதுரை உயர்நீதிமன்றம் கண்டித்திருந்தது. அதற்குப் பின் இரண்டு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், தற்போது ஆகாஷ் என்கிற இளைஞர்.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருக்கிறது. அதிலும் பட்டியல் சமூக மக்கள் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் அவை இன்னும் அலட்சியமாகக் கையாளப்படுகின்றன. காவல்துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் பட்டியல் சமூக மக்கள் மீது எந்தவித அக்கறையும் இல்லையென்பதாகவே இதை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. காவல்துறையினர் உரிய நடவடிக்கையோ பாதுகாப்போ அளிப்பார்கள் என்கிற நம்பிக்கையை பட்டியல் சமூக மக்கள் இழந்துவருகிறார்கள். சமூக இயக்கங்களும் மனித உரிமைச் செயற்பாட்டார்களும் நீதிமன்றங்களும் தொடந்து இதனை கவனப்படுத்தி வருகிறபோதிலும் திமுக அரசு இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த முனைப்பும் இல்லாமல் இருக்கிறது.
ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூக - அரசியல் பாதுகாப்பை உறுதி செய்யும் அடிப்படை உரிமைக்காகவே வாக்குரிமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வாக்கரசியலுக்காக கூட பட்டியல் சமூக மக்களின் பிரச்சினைகளுக்கு செவி கொடுக்க மறுக்கிறது தமிழக அரசு. எல்லா அதிகார மட்டத்திலும் கைவிடப்பட்டவர்களாகவே பட்டியல் சமூக மக்களின் நிலை இருக்கிறது.
“அரசியலில் நாம் ‘ஒரு மனிதன் – ஒரு ஓட்டு – ஒரு மதிப்பு’ என்ற சமத்துவத்தை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், சமூகமும் பொருளாதாரமும் சமத்துவமற்றதாகவே இருந்தால், இந்த ஜனநாயகம் நீண்ட காலம் நிலைக்காது” என வலியுறுத்தியவர் பாபாசாகேப் அம்பேத்கர்.
இன்று பட்டியல் சமூக மக்களின் உயிர் பாதுகாப்பே உறுதி செய்யப்படாத நிலையில், இந்த எச்சரிக்கை இன்னும் தீவிரமான அரசியல் கேள்வியாக மாறியுள்ளது. ஆகாஷ் கொலை வழக்கில் உடனடி நடவடிக்கை எடுத்து, நீதியை உறுதி செய்ய தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். எந்த மக்களின் பிரச்சினைகளை பேச பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார்களோ அந்தப் பிரச்சினையை பேசாத பட்டியல் சமூகப் பிரதிநிதிகள் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். பட்டியல் சமூக மக்கள் தம் உரிமைகளை வென்றெடுக்க முன்னெப்போதையும் விட அணியமாக வேண்டிய தேவையும் இருக்கிறது, அதுவே இந்நிலையை மாற்றும்.
English Summary
pa ranjith condemn to dmk govt