காசு கொடுத்து ஓட்டு வாங்கும் நச்சு கலாச்சாரத்தை ஒழித்துள்ளோம்: சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அதிரடி உரை!
We Have Eradicated the Toxic Culture of Cash-for-Votes CM Vijays Resounding Speech in TN Assembly
17-வது தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் அமர்வில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தனது திரைப்பயணம், மக்கள் இயக்கம் மூலம் செய்த பணிகள் முதல் தேர்தல் வெற்றி வரையிலான நீண்ட நெடிய பாதையை அவர் அவையில் மிக எதார்த்தமாக நினைவு கூர்ந்தார்.
ஈழத் தமிழர்களின் நலனுக்காகத் தாம் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்குச் செய்த பல்வேறு நற்பணிகளைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், தனது திரைப்படங்கள் வாயிலாகவும் தொடர்ந்து சமூக நீதியைப் பேசி வந்ததாகக் குறிப்பிட்டார். பொதுவாகப் பலரும் கட்சி ஆரம்பித்த பின்னரே மக்களைத் தேடிச் செல்வார்கள், ஆனால் தாம் மக்களின் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் எதார்த்த தேவைகளை உணர்ந்த பின்னரே தவெக எனும் அரசியல் பேரியக்கத்தைத் தொடங்கியதாகத் தெரிவித்தார். இரு பெண் தலைவர்களைத் தங்களின் கொள்கைத் தலைவர்களாக அறிவித்த ஒரே கட்சி தவெக தான் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்ட அவர், தந்தை பெரியாரின் கொள்கைகளை மதிப்பினும், அவரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் தமக்கு உடன்பாடு இல்லை என்பதையும் அவையில் தெளிவாக முன்வைத்தார்.
தவெக-வை ஒரு நடிகனின் கட்சி என்று அரசியல் எதிரிகள் பலர் நக்கல், நையாண்டி செய்ததையும், தங்களின் தொடக்ககால மக்கள் சந்திப்புகளுக்குப் பல்வேறு தடைகள் மற்றும் முட்டுக்கட்டைகள் போடப்பட்டதையும் விவரித்த முதலமைச்சர் விஜய், அத்தனையையும் கடந்து நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக எவ்வித கூட்டணியுமின்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியைப் பிடித்துள்ளதாகப் பெருமையுடன் கூறினார். மேலும், மக்கள் இயக்கத்தினர் உள்ளாட்சித் தேர்தலிலேயே தங்களின் வெற்றிக்கணக்கைத் தொடங்கிவிட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், கரூரில் நிகழ்ந்த கொடூரமான உயிரிழப்புச் சம்பவம் தனது நெஞ்சை விட்டு எப்போதும் அகலாது என்றும் உருக்கமாகத் தெரிவித்தார்.
தற்போதைய தமிழக அரசு மிகமிக சாமான்ய மனிதர்களுக்கான ஆட்சியாகச் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் முக்கியம் என்று நினைப்பதுதான் தங்களின் ஆட்சியின் தாரக மந்திரம் என்று குறிப்பிட்ட அவர், மக்களாட்சியில் புரையோடிப் போயிருந்த காசு கொடுத்து ஓட்டுகளை வாங்கும் நச்சு கலாச்சாரத்தைத் தவெக முற்றிலும் ஒழித்துக் கட்டியுள்ளதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். நேர்மையான, தூய்மையான மற்றும் லஞ்சமற்ற நிர்வாகத்தை மக்களுக்கு வழங்குவதில் தவெக அரசு என்றும் உறுதியாக இருக்கும் எனக் கூறி முதலமைச்சர் விஜய் தனது உரையை நிறைவு செய்தார்.
English Summary
We Have Eradicated the Toxic Culture of Cash-for-Votes CM Vijays Resounding Speech in TN Assembly