'எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க முடியாது'...! - ராகுல் காந்தி கைது விவகாரத்தில் பொங்கி எழுந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா...!
voice opposition parties cannot be suppressed Minister Adhav Arjuna who rose anger over Rahul Gandhi arrest
நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கக் கூடாது என்றும், உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,"மருத்துவக் கல்வியில் சேருவதற்கான தகுதித் தேர்வாக நீட் அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியான தொடக்கக் காலத்திலேயே, அதற்கு எதிராக தமிழகத்திலிருந்துதான் முதல் எதிர்ப்புக் குரல் எழுந்தது.

மாணவர்களின் கல்வி உரிமை, சமூகநீதி மற்றும் எதிர்கால நலனை முன்வைத்து தமிழகத்தில் தொடங்கிய அந்த எதிர்ப்பு, இன்று நாடு முழுவதும் வலுப்பெற்று வருகிறது.நீட் தேர்வுக்கு எதிரான தமிழகத்தின் குரல் தற்போது ஒட்டுமொத்த இந்தியாவிலும் எதிரொலிக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து ஜனநாயக வழியில் அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், அவர்களின் போராட்டத்தின் நோக்கத்தையும், கோரிக்கைகளின் நியாயத்தையும் புரிந்துகொள்ளாமல், மாணவர்களை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.மாணவர்களின் ஜனநாயக உரிமைகளையும், போராடும் உரிமையையும் மதிக்க வேண்டிய மத்திய அரசு, அதற்கு மாறாக அடக்குமுறையைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
இதேபோல், டெல்லியில் இளைஞர்கள் முன்னெடுத்த அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி ஆகியோரை டெல்லி காவலர்கள் இழுத்துச் சென்றும், வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்பட்டுள்ள அப்பட்டமான தாக்குதலாகும்.
மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் எழுந்துள்ள எதிர்ப்பையும், மாணவர்களின் உணர்வுகளையும் மத்திய அரசு இனியும் புறக்கணிக்கக் கூடாது. மாணவர்களின் நலனையும், சமூகநீதியையும் கருத்தில் கொண்டு, நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
மேலும், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஒவ்வொரு முயற்சியையும் உறுதியுடன் முன்னெடுப்போம். மாணவர்களின் உரிமைக் குரலுக்கும், அவர்களின் எதிர்கால நலனுக்கும் எப்போதும் துணைநிற்போம்.இவ்வாறு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
English Summary
voice opposition parties cannot be suppressed Minister Adhav Arjuna who rose anger over Rahul Gandhi arrest