ஈரான் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை என்ன...? டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் வெடித்த புதுப் பரபரப்பு...!
What next step against Iran Donald Trump warning sparks fresh tension Middle East
அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், போர் நிறுத்த முயற்சிகள் முறிந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளும் மீண்டும் முழு வீச்சில் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. தொடர்ந்து இரண்டாவது வாரமாக நீடித்து வரும் இந்தப் போரால், ஈரான் கடுமையான சேதங்களை எதிர்கொண்டு வருகிறது.இந்த நிலையில், அமெரிக்கா தாக்குதல்களை நிறுத்தினாலும், ஏற்பட்டுள்ள பேரழிவிலிருந்து ஈரான் மீண்டு வர 20 முதல் 25 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், தற்போதைய சூழலில் அமெரிக்கா போர்க்களத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக டிரம்ப் தெரிவித்ததாவது,"ஹார்முஸ் ஜலசந்தியில் நடைபெறும் வணிகக் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஈரானின் ராணுவ திறனை முடக்கும் நோக்கில், அந்நாட்டின் முக்கிய ராணுவ கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
நதான்ஸ் அணு மையத்திற்கு அருகே, மலைப்பகுதியின் அடியில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் ரகசிய நிலத்தடி அணுசக்தி வளாகமும் அமெரிக்காவின் அடுத்த இலக்காக இருக்கக்கூடும். அந்தப் பகுதியில் விரைவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படலாம். பொதுவாக எந்த இலக்கையும் முன்கூட்டியே அறிவிப்பது எனது வழக்கம் அல்ல.
ஆனால், இந்தத் தாக்குதலைத் தடுக்க ஈரானால் எதுவும் செய்ய முடியாது.இவ்வாறு டிரம்ப் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கு கடும் பதிலடி கொடுத்த ஈரான் ராணுவ தலைமையகம், நிலத்தடி அணுசக்தி வளாகம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அது போரின் அடுத்தகட்ட விரிவாக்கமாகக் கருதப்படும் என்று எச்சரித்துள்ளது.
மேலும், அமெரிக்கா மட்டுமின்றி அதன் கூட்டணி நாடுகளும் தாக்குதலுக்கு உள்ளாகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, பஹ்ரைன் மீது ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் தடுத்து நிறுத்தியதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டதால், பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.அதேபோல், குவைத் மற்றும் ஜோர்டான் நாடுகளும் ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாகத் தெரிவித்துள்ளன.
குவைத் ராணுவமும், தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து ஆளில்லா விமானத் தாக்குதல்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.இதனால், அமெரிக்கா-ஈரான் மோதல் அண்டை நாடுகளுக்கும் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் உச்சத்தை எட்டியுள்ளது.
English Summary
What next step against Iran Donald Trump warning sparks fresh tension Middle East