அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகளை அள்ளிக் கொடுத்த விஜய்! தவெக நிர்வாகிகளுக்குள் வெடித்த அதிருப்தி?
Vijay showered key posts on those who joined from the AIADMK has discontent erupted among TVK functionaries
அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு நீண்ட நாட்களாக கட்சி பொறுப்புகள் வழங்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அவர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கி தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அதிருப்தியை சமாளிக்க முயன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், பல ஆண்டுகளாக விஜய்யுடன் பயணித்து கட்சியை வளர்த்த தங்களை ஒதுக்கிவிட்டு புதிதாக இணைந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக சில மாவட்டங்களில் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டபோது, புதிதாக உருவான கட்சி என்பதால் அதன் அரசியல் பலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றது தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது. தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக அந்தக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரும் தவெகவை நோக்கி நகரத் தொடங்கினர். குறிப்பாக எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா உள்ளிட்ட முக்கிய அரசியல் முகங்கள் தவெகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், புதிதாக இணைந்தவர்களுக்கு உடனடியாக முக்கிய பொறுப்புகள் வழங்கப்படாததால் அவர்கள் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. இதனால், ஏற்கனவே தவெகவில் இருக்கும் நிர்வாகிகளுக்கும் புதியவர்களுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் கட்சி தலைமையிடம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்தச் சூழலில் தற்போது சில முக்கிய நியமனங்களை விஜய் மேற்கொண்டுள்ளார். முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளர் பொறுப்பும், கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் பதவியுடன் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் இசக்கி சுப்பையா தென்காசி மாவட்ட அமைப்புச் செயலாளராகவும், மரகதம் குமரவேல் துணைப் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பதவி அறிவிப்புகள் ஒரு தரப்பினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மறுபுறம் கட்சியின் ஆரம்ப கால நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக விஜய் மக்கள் இயக்கம் மற்றும் ரசிகர் மன்ற காலத்திலிருந்தே விஜய்யுடன் இணைந்து பணியாற்றி, கட்சி தொடங்கியபோது அடித்தளத்தை உருவாக்கியவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சில மாவட்டங்களில் எழுந்துள்ளதாக தெரிகிறது.
“கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்தவர்களைத் தாண்டி, தேர்தலுக்குப் பிறகு வந்தவர்களுக்கு எப்படி மாவட்ட மற்றும் மாநில அளவிலான பொறுப்புகள் வழங்கப்படுகின்றன?” என்ற கேள்வியும் கட்சியின் சில நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த அதிருப்தி அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் பனையூர் தலைமைக்கும் சென்றுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து ஏற்கனவே கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், சில மாவட்டங்களில் தவெகவால் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அந்தப் பகுதிகளில் ஏற்கனவே அரசியல் செல்வாக்கு கொண்டவர்களை கட்சிக்குள் இணைத்து அமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்திலேயே அவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்படுவதாக தெரிகிறது.
மேலும், வரும் உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட முக்கிய பதவிகளை கைப்பற்றுவதற்கு உள்ளூர் அளவில் செல்வாக்கு கொண்ட அரசியல் தலைவர்களின் ஆதரவு அவசியம் என்பதால், புதியவர்களை பயன்படுத்திக் கொள்வது கட்சியின் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அடுத்தடுத்து நகர், மாநகர் மற்றும் ஒன்றிய அளவிலான கட்சி பொறுப்புகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், “புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டாலும், கட்சிக்காக நீண்ட காலம் உழைத்தவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும்” என்ற தகவல் நிர்வாகிகள் மத்தியில் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால், புதிய அரசியல் முகங்களை இணைத்து கட்சியை விரிவுபடுத்துவது ஒருபுறம் இருந்தாலும், நீண்டகாலமாக கட்சியில் பணியாற்றியவர்களின் அதிருப்தியை சமாளித்து அனைவரையும் ஒருங்கிணைப்பதே விஜய் தலைமையிலான தவெகவுக்கு அடுத்த முக்கிய சவாலாக மாறியுள்ளது.
English Summary
Vijay showered key posts on those who joined from the AIADMK has discontent erupted among TVK functionaries