திமுகவில் அமைப்பு மாற்றம் எப்போது? ஸ்டாலின் மௌனத்தால் அதிருப்தியில் திமுக உடன்பிறப்புகள்!
When will the organizational reshuffle in the DMK take place DMK cadres are dissatisfied with Stalin silence
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்தபோதே திமுக தோல்வியை சந்தித்தது கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலேயே தோல்வியடைந்தது கட்சியினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கட்சியில் மிகப்பெரிய அளவில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை எந்த முக்கிய அறிவிப்பும் வெளியாகாதது இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை திமுகவினர் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க முடியாது என்ற அரசியல் சென்டிமென்ட் இந்தத் தேர்தலிலும் தொடர்ந்த நிலையில், அதைவிட அதிர்ச்சியாக மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியை சந்தித்தார். மேலும் 15-க்கும் மேற்பட்ட முக்கிய அமைச்சர்களும் தேர்தலில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.
தேர்தல் தோல்விக்கான காரணங்களை விரிவாக ஆய்வு செய்ய திமுக தலைமை சார்பில் கள ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டன. மாவட்டம் வாரியாகவும், தொகுதி வாரியாகவும் ஆய்வு மேற்கொண்ட இந்தக் குழுக்கள், கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அடிமட்ட தொண்டர்களை சந்தித்து கருத்துகளை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட விரிவான அறிக்கை திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. கட்சிக்குள் நீண்டகாலமாக நிலவி வரும் அதிருப்தி, நிர்வாகக் குறைபாடுகள், தொகுதி அளவிலான பிரச்சனைகள், வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து திமுகவை அமைப்பு ரீதியாக மறுசீரமைப்பதற்காக தங்கம் தென்னரசு, கீதாஜீவன், சக்கரபாணி, சிவசங்கர், தமிழரசி, அப்துல்லா, பரந்தாமன், எழிலன், முரசொலி, கருணா உள்ளிட்டோர் இடம்பெற்ற குழுவும் அமைக்கப்பட்டதாக தெரிகிறது. இந்தக் குழுவினர் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து கட்சி அமைப்பில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
அதில், புதிய நிர்வாகிகளை நியமிப்பதுடன், தற்போதுள்ள மாவட்டங்களையும் அதிகமாக பிரிக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதன் முக்கிய அம்சமாக, இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற புதிய கட்டமைப்பை உருவாக்க ஸ்டாலின் திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது. தற்போது பல மாவட்டங்களில் நீண்ட காலமாக ஒரே நபர்களே மாவட்டச் செயலாளர் பதவியில் இருப்பதாகவும், இதனால் அவர்களைச் சுற்றி தனிப்பட்ட அரசியல் அதிகார மையங்கள் உருவாகியுள்ளதாகவும் கட்சிக்குள் விமர்சனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையை மாற்றும் வகையில், தமிழகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் மாவட்டச் செயலாளர்களை நியமித்து, இளம் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் இளைஞரணி நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கும் திட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்த தகவல் குறிப்பாக உதயநிதி ஸ்டாலினை ஆதரிக்கும் இளைஞரணி நிர்வாகிகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. நீண்டகாலமாக கட்சியில் பணியாற்றி வரும் இளைஞர்களுக்கு மாவட்ட அளவில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவானது.
மேலும், ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பியதும் அமைப்பு மாற்றம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், ஸ்டாலின் தமிழகம் திரும்பிய பிறகும் இதுவரை மாவட்டச் செயலாளர்கள் நியமனம் உள்ளிட்ட முக்கிய அமைப்பு மாற்றங்கள் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள்கூட தொடங்கவில்லை என்ற தகவல் இளைஞரணி நிர்வாகிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே கள ஆய்வுக் குழு, மறுசீரமைப்புக் குழு என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டாலும், அவை வழங்கிய பரிந்துரைகள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்ற அதிருப்தி கட்சிக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், “புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் எப்போது? அமைப்பு மாற்றம் எப்போது?” என்ற கேள்வி திமுக இளைஞரணி மற்றும் கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளதாக தெரிகிறது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை அடிப்படையில் இருந்து மறுசீரமைத்து, புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பு வழங்கும் நடவடிக்கையை ஸ்டாலின் எப்போது தொடங்கப் போகிறார் என்பதே தற்போது திமுகவுக்குள் முக்கிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
English Summary
When will the organizational reshuffle in the DMK take place DMK cadres are dissatisfied with Stalin silence