இனி கருப்பட்டி வாங்குவது சவால்தான்...! ‘எல்நினோ’ தாக்கத்தால் உச்சம் தொட்ட விலை... அதிர்ச்சியில் மக்கள்...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பனைத் தொழிலுக்கு இந்த ஆண்டு பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. மழைப்பொழிவு குறைந்ததால் பனை மரங்களில் இருந்து கிடைக்கும் பதநீரின் அளவு சரிந்துள்ளது. இதன் நேரடி தாக்கமாக கருப்பட்டி தயாரிப்பும் குறைந்து, சந்தையில் அதன் விலை வேகமாக உயர்ந்து வருகிறது.ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பனை மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

இதனால் அந்தப் பகுதிகளில் பனை ஏறும் தொழிலாளர்கள், பதநீர் சேகரிப்பவர்கள், கருப்பட்டி தயாரிப்பவர்கள் என ஏராளமானோர் இந்தத் தொழிலை நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி, நரிப்பையூர், மாரியூர், கன்னிராஜபுரம், மேலச்செல்வனூர், மலட்டாறு உள்ளிட்ட கிராமங்களில் பனைத் தொழில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பதநீர் பருவம் தொடங்கும். பனை மரங்களில் இருந்து சேகரிக்கப்படும் பதநீரை முறையாக காய்ச்சி, அதிலிருந்து கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது.

பின்னர் அவை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.ராமநாதபுரம் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் கருப்பட்டி அளவில் பெரியதாக இருப்பதுடன், சுவையிலும் தனித்தன்மை கொண்டதாக உள்ளது. இதனால் உள்ளூர் சந்தைகளில் மட்டுமின்றி வெளிமாவட்டங்களிலும் இதற்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட கருப்பட்டியின் சுவையும் தரமும் சிறப்பாக இருந்ததால், பழைய கருப்பட்டிக்கும் தற்போது கூடுதல் விலை கிடைத்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் உடன்குடி கருப்பட்டிக்கும் தனி சிறப்பு உண்டு. மற்ற பகுதிகளில் கிடைக்கும் கருப்பட்டியை விட அளவில் சிறியதாக இருந்தாலும், அதன் சுவை மற்றும் தரம் காரணமாக சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கருப்பட்டி மட்டுமின்றி பனங்கற்கண்டு, பனஞ்சுக்கு, சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பனை சார்ந்த பொருட்களும் இப்பகுதிகளில் தயாரிக்கப்படுகின்றன. பாரம்பரிய சுவையை விரும்பும் பொதுமக்கள் இவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் பனை மரங்களில் பதநீர் சுரப்பு கணிசமாக குறைந்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த ஆண்டு பருவமழை காலத்திலும் போதிய மழை கிடைக்கவில்லை.

அதன்பிறகு கோடை காலத்திலும் மழைப்பொழிவு குறைந்ததால், பனை மரங்களில் இருந்து வழக்கமான அளவில் பதநீர் கிடைக்கவில்லை.இதன் காரணமாக கருப்பட்டி தயாரிப்பு பாதியாகக் குறைந்துள்ளதாகவும், இந்த ஆண்டுக்கான பதநீர் பருவம் நிறைவடையும் நிலையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பதநீர் வரத்து குறைந்து, கருப்பட்டி உற்பத்தியும் சரிந்துள்ளதால் சந்தையில் விலை உயர்ந்துள்ளது. சாயல்குடி பகுதியில் கடந்த மாதம் ஒரு கிலோ கருப்பட்டி ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதே கருப்பட்டியின் விலை ரூ.400 வரை உயர்ந்துள்ளது.பதநீர் பருவம் விரைவில் நிறைவடைய உள்ளதால், இனிவரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வழக்கமாக பருவமழை மற்றும் குளிர்காலங்களில் கருப்பட்டிக்கு தேவை அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு மழைப்பொழிவு குறைந்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பது, விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.உடன்குடி பகுதியில் பழைய கருப்பட்டி ஒரு கிலோ ரூ.600-க்கும், புதிய கருப்பட்டி ரூ.500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பனங்கற்கண்டு ஒரு கிலோ ரூ.800-க்கும், சில்லுக்கருப்பட்டி ஒரு கிலோ ரூ.600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.பருவநிலை மாற்றத்தால் பனை மரங்களில் பதநீர் சுரப்பு குறைந்துள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக கருப்பட்டி உற்பத்தியும் சரிந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், நுகர்வோருக்கும் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Now buying karupatti challenge Prices reached record highs due impact El Nino People shock


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->