அடுத்த அதிரடிக்கு தயாராகும் விஜய்!தமிழகத்தில் பள்ளி, கோயில் அருகே உள்ள 500 டாஸ்மாக் கடை மூடப்படுகிறதா?லிஸ்ட் எடுக்கும் அதிகாரிகள்!
Vijay is preparing for his next move Are 500 TASMAC shops near schools and temples in Tamil Nadu being closed Officials will take the list
தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விதிமுறைகளை மீறி அமைந்துள்ள சுமார் 200 முதல் 500 டாஸ்மாக் கடைகள் அகற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
தேர்தல் பிரசாரத்தின் போது பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தவெக ஆட்சியில் போதைப் பொருள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், பெண்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்காது என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.
முதல்வராக பதவியேற்ற பிறகும் இதையே மீண்டும் வலியுறுத்திய விஜய், “சட்டம் ஒழுங்கை உறுதியாக நிலைநாட்டுவேன். பெண்களின் பாதுகாப்பு எனது முக்கிய முன்னுரிமை” என்று தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்த “சிங்கப்பெண்” என்ற சிறப்பு அதிரடிப் படையை அமைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், தமிழகம் முழுவதும் போதைப்பொருள் குற்றங்களை கண்டறிந்து தடுக்கும் வகையில் அனைத்து மாநகரங்களிலும் மற்றும் மாவட்டங்களிலும் தனிப்பட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவுகள் அமைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் மதுபானக் கடைகள் தொடர்பான புகார்கள் குறித்து முதல்வர் விஜய் விரிவாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் குறித்து மாணவிகள், பெண்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல புகார்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் எல்லைக்குள் உள்ள டாஸ்மாக் கடைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் கடைகளை மூடுவதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
சுமார் 200 முதல் 500 வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், பெண்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
English Summary
Vijay is preparing for his next move Are 500 TASMAC shops near schools and temples in Tamil Nadu being closed Officials will take the list