விஜய்க்கு அரசியல் பக்குவம் இல்லை! தேர்தலில் ஸ்டாலினுக்காக பிரச்சாரம் செய்ய போறேன்! எஸ்.வி சேகர்!
Vijay is not politically mature I will campaign for Stalin in the elections SV Sekar
மந்தைவெளிப்பாக்கம் 5-வது குறுக்கு தெருவிற்கு, நாடக நடிகர் மற்றும் தமிழ்த் தொலைக்காட்சி தொடர் முன்னோடி எஸ்.வி. வெங்கடராமன் பெயர் சூட்டப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இந்த பெயர்ப்பலகையை திறந்து வைத்து, எஸ்.வி. வெங்கடராமன் குடும்பத்தினருக்கு பெருமையை அளித்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அவரது மகனும், பிரபல நடிகருமான எஸ்.வி. சேகர், தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,“என் தந்தை வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயரை சூட்டியிருப்பது எங்கள் குடும்பத்துக்கு வாழ்நாள் பெருமை. முதலமைச்சர் ஸ்டாலின் எங்கள் குடும்பத்திற்கு நெருக்கமானவர். எல்லோருக்கும் முதலமைச்சராகப் பணியாற்றுகிறார்,” என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:“இனி எப்போதுமே அருமை நண்பர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பின்னால் அணிவகுத்து நிற்பேன். அது எனது வாழ்நாள் கடமை. வரவிருக்கும் தேர்தல்களில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வேன்,” என்றார்.
திரையுலக நடிகர் விஜய் குறித்து அவர் விமர்சனமாகக் குறிப்பிட்டபோது,“விஜய்க்கு இன்னும் அரசியல் தெரியவில்லை. திருச்சியில் வந்த கூட்டம் நாகையில் வரவில்லை. சினிமாவில் கைத்தட்ட வசனம் போல பேசுகிறார். தேர்தல் என்பது வார இறுதியில் மட்டும் செய்யக்கூடிய வேலை அல்ல; 24 மணி நேரமும் உழைக்க வேண்டிய சேவை. மக்கள் தொடர்பு மற்றும் அனுபவம் தேவை. விஜய் இன்னும் 15 முதல் 20 ஆண்டுகள் அரசியலில் உழைத்து பக்குவப்பட வேண்டும். 2026 தேர்தலே அவருக்கு அரசியலின் உண்மையை உணர்த்தும்,” என தெரிவித்தார்.
எஸ்.வி. சேகரின் இந்தக் கருத்துகள், தமிழ்நாட்டின் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளன.
English Summary
Vijay is not politically mature I will campaign for Stalin in the elections SV Sekar