விஜய் பெரம்பூரில் களமிறங்குவாரா...? ‘ஸ்டார் தொகுதி’யாக மாறும் அரசியல் போர்க்களம்... கட்சிகள் மத்தியில் சூடேறும் போட்டி!
Vijay contest Perambur political battleground that become star constituency competition parties
த.வெ.க தலைவர் விஜய் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற தீர்மானம், அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதும், மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் பெரம்பூர் தொகுதி தற்போது ‘வி.ஐ.பி ஸ்டார் தொகுதி’ என்ற புதிய அடையாளத்தைப் பெற்றுள்ளது.மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தில், “மாற்றத்தை விரும்பும் மக்கள் ஆதரவு பெரம்பூரில் பெருகி வருகிறது; குறுகிய காலத்திலேயே 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்துள்ளனர்” எனத் தவெக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சென்னையில் திமுக வலுவாக இருந்தாலும், அதையே சவாலாக எடுத்துக்கொண்டு விஜய் இத்தொகுதியில் களம் காண வேண்டும் என வலியுறுத்தினர்.முன்னதாக ‘வி’ சென்டிமென்ட் காரணமாக விருகம்பாக்கம், விக்கிரவாண்டி, வேளச்சேரி போன்ற தொகுதிகள் பேசப்பட்ட நிலையில், அதற்கு மாறாக பெரம்பூர் தேர்வாகியுள்ளது. அடித்தட்டு மக்கள் அதிகம் வசிப்பது, கிறிஸ்தவர் சமூக வாக்குகள் கணிசமாக இருப்பது, தொழிலாளர் மற்றும் நடுத்தர வர்க்க ஆதரவு இருப்பது போன்ற சமூக-அரசியல் காரணங்களே இதற்கு முக்கிய காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அரசியல் வரலாற்றைப் பார்த்தால், பெரம்பூர் தொகுதி நீண்ட காலமாக திமுகவின் பிடிப்பில் உள்ளது. கடந்த தேர்தல்களில் ஆர்.டி.சேகர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். மீண்டும் 2026-ல் போட்டியிட அவர் தீவிரமாக முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநகராட்சி உறுப்பினர் முதல் மாவட்டச் செயலாளர் வரை பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
மற்றொரு புறம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவும் தனது வியூகத்தை மாற்றி அமைத்து வருகிறது. ஆரம்பத்தில் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்க திட்டமிட்டிருந்த இந்த தொகுதியில், தற்போது நேரடியாக களம் இறங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கிறிஸ்தவர் சமூக ஆதரவைப் பெறும் முகமாக எம்.ஏ.சேவியர் போன்ற உள்ளூர் செல்வாக்கு மிக்க நிர்வாகியை வேட்பாளராக நிறுத்தும் வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக சேவைகள், கல்வி உதவித் திட்டங்கள், நீண்டகால மக்கள் தொடர்பு ஆகியவை அவருக்கு பலமாக உள்ளன.இதேவேளை, நாம் தமிழர் கட்சி சார்பில் வெற்றித்தமிழன் போட்டியிட உள்ளார்.
பெரம்பூரை பூர்வீகமாகக் கொண்ட அவர், கட்சியின் தொடக்க காலம் முதல் செயல்பட்டு வருபவர் என்பதால் அடிப்படை வாக்கு வலிமை இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
மொத்தத்தில், விஜய் களமிறங்கினால் திமுக, அதிமுக, நாம் தமிழர் ஆகிய மூன்று முனைப் போட்டி உருவாகும் சூழல் நிலவுகிறது. இதனால், பெரம்பூர் தொகுதி 2026 தேர்தலின் மிகப்பெரிய கவனம் ஈர்க்கும் ‘ஸ்டார் போர்க்களம்’ ஆக மாறியுள்ளது.
English Summary
Vijay contest Perambur political battleground that become star constituency competition parties