பெரும்பான்மை முட்டாள்தனம்... திமுக - விசிக வார்த்தைப் போர் - சிந்தனைச் செல்வன் விமர்சனம்!
VCK General Secretary Sinthanai Selvan Quotes Anton Chekhov on Failed Society Amid War of Words Between DMK and VCK Cadres
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசு அமைக்க ஆதரவளித்து, தவெக அமைச்சரவையில் அங்கம்பெற்றுள்ளது. இந்நிலையில், விசிக சார்பில் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள வன்னியரசு, சட்டப்பேரவையில் திமுகவைக் கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார். இது திமுக தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இரு கட்சித் தொண்டர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் தீவிர வார்த்தைப் போர் மூண்டுள்ளது.
இத்தகைய சுழலுக்கு மத்தியில், விசிக பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனைச் செல்வன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தையும் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்கோவின் தத்துவார்த்தப் பொன்மொழியை மேற்கோள் காட்டி அவர் அந்தப் பதிவை வெளியிட்டுள்ளார்.
அப்பதிவில், "தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" என்ற கேள்விக்கு ஆண்டன் செக்கோவ் அளித்த விளக்கத்தைக் குறிப்பிட்டுள்ளார்: "தோல்வியடைந்த சமூகங்களில் ஆரோக்கியமாகச் சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள். சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராகத் தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும். அங்கே பெரும்பான்மை என்பது முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்" என்று விவரித்துள்ளார்.
மேலும், "எந்தச் சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்வான சிந்தனைகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவையாகத் தள்ளிவைக்கப்படுகின்றனவோ, எந்தச் சமூகத்தின் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ அதுவே தோல்வியடைந்த சமூகமாகும்" என்றும் செக்கோவின் கூற்றை மேற்கோளிட்டுள்ளார். திமுக-விசிக தொண்டர்களிடையே பரஸ்பர மோதல் அதிகரித்து வரும் வேளையில், சிந்தனைச் செல்வனின் இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பரவலான விவாதங்களை முடுக்கிவிட்டுள்ளது.
English Summary
VCK General Secretary Sinthanai Selvan Quotes Anton Chekhov on Failed Society Amid War of Words Between DMK and VCK Cadres