விஜய்க்கு விசிக நிபந்தனையற்ற ஆதரவு...? ஆதவ் அர்ஜுனாவின் அதிரடி மூவ்!
VCK Extends Unconditional Support to Vijay TVK Secures Required Majority to Form Government
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக, ஆட்சி அமைப்பதற்கான 'மேஜிக் நம்பரை' எட்டிப் பிடித்துள்ளது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக). கடந்த சில நாட்களாக நீடித்து வந்த அரசியல் இழுபறிகள் மற்றும் நள்ளிரவு நாடகங்களுக்குப் பிறகு, தற்போது கிடைத்துள்ள தகவல்கள் தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. 116 இடங்களுடன் பெரும்பான்மைக்குத் தவித்துக் கொண்டிருந்த விஜய்க்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தனது கரம் கொடுத்துள்ளது.
மீனம்பாக்கம் சந்திப்பும் ஆதரவுக் கடிதமும்:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தனது முடிவை இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பதாகத் தெரிவித்திருந்தார். ஒட்டுமொத்தத் தமிழகமும் அசோக் நகர் விசிக அலுவலகத்தை நோக்கித் திரும்பியிருந்த நிலையில், ஒரு எதிர்பாராத நகர்வாகத் தவெக-வின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, திருமாவளவன் தங்கியுள்ள மீனம்பாக்கம் தனியார் ஓட்டலுக்கு விரைந்தார்.
அங்கு நடைபெற்ற குறுகிய நேர ஆலோசனையைத் தொடர்ந்து, தவெக ஆட்சி அமைக்க விசிக 'நிபந்தனையற்ற ஆதரவு' வழங்குவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாறிய அரசியல் கணக்கு:
விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று ஒரு தொகுதியை ராஜினாமா செய்ததால் தவெக-வின் பலம் 107-ஆக இருந்தது. இவர்களுடன் காங்கிரஸ் (5) மற்றும் இடதுசாரி கட்சிகளின் (4) ஆதரவு சேர்ந்ததில் பலம் 116-ஐ எட்டியது. தற்போது விசிக-வின் 2 சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தால், தவெக கூட்டணியின் மொத்த பலம் 118-ஆக உயரும். இதன் மூலம் தமிழகச் சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான குறைந்தபட்ச பெரும்பான்மையை விஜய் அதிகாரப்பூர்வமாக எட்டுவார்.
English Summary
VCK Extends Unconditional Support to Vijay TVK Secures Required Majority to Form Government