"ஒரே மாதத்தில் அதலபாதாளத்தில் தமிழ்நாடு" - முன்னாள் அமைச்சர் பெஞ்சமினை வரவேற்று மு.க.ஸ்டாலின் சாடல்!
MK Stalin Slams TVK Governance Welcomes Ex Minister Benjamin into DMK
சென்னை வானகரத்தில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் பிரமாண்ட விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்த விழாவில், அதிமுகவின் முன்னாள் அமைச்சரான பெஞ்சமின் தலைமையில், அக்கட்சியைச் சேர்ந்த சுமார் 5,000-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களை திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர்.
பெஞ்சமினுக்கு வரவேற்பும் பாராட்டும்
அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமினை வரவேற்றுப் பேசிய மு.க.ஸ்டாலின், "அதிமுகவில் பல ஆண்டுகள் உண்மையாக, கடுமையாக ஓயாமல் உழைத்தவர் பெஞ்சமின். முந்தைய ஆட்சிக்காலத்தில் சட்டமன்றத்தில் நாங்கள் மக்கள் பிரச்சினைகள் குறித்துக் கேள்வி எழுப்பும் போதெல்லாம், அப்போதைய அமைச்சராக இருந்த பெஞ்சமின் முறையான புள்ளிவிவரங்களுடன் மிகவும் கண்ணியமாகப் பதிலளிப்பார்" என்று அவரது நாடாளுமன்றச் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசினார்.
எம்.ஜி.ஆர் மற்றும் திமுகவின் பாரம்பரியம்
தொடர்ந்து திமுகவின் வரலாற்றுப் பெருமைகளை நினைவுகூர்ந்த அவர், "தமிழ்நாட்டை உன்னத நிலைக்கு வளர்த்தெடுத்த ஒரே பேரியக்கம் திமுக தான். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் இருந்ததும், அவர் முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று கால்பதித்ததும் நமது உதயசூரியன் சின்னத்தில்தான். 'உங்களுக்கு நான் தலைவனாக இருக்கலாம், ஆனால் எனக்கு தலைவன் கலைஞர் தான்' என்று எம்.ஜி.ஆரே அன்று பொதுமேடையில் முழங்கினார். இத்தகைய பவள விழா கண்ட பேரியக்கமான திமுக வலுவாக இருந்தால் மட்டும்தான் தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியும் என்பதை உணர்ந்துதான் இன்று இத்தனை பேர் இணைந்துள்ளனர்" என்றார்.
தவெக அரசு மீது கடுமையான விமரிசனம்
தற்போதைய தவெக அரசை மிகக் கடுமையாகச் சாடிய ஸ்டாலின், "பொதுவாகத் தேர்தல் முடிந்த பின்னர் வெற்றி பெற்ற ஆளுங்கட்சியில்தான் பலரும் இணைவார்கள். ஆனால், இன்றோ எதிர்க்கட்சியான திமுகவில் மக்கள் திரளாக இணைகிறார்கள். தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த ஒரே ஒரு மாத காலத்திலேயே தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை ஒருபுறம் அச்சுறுத்துகிறது என்றால், அந்தச் சட்டவிரோதச் செயல்களில் ஆளுங்கட்சியினரே நேரடியாகத் துணிச்சலாக ஈடுபடுவது ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்கும் பெரும் வேதனை தருகிறது" என்று தவெக அரசின் ஒரு மாத கால நிர்வாகத்தைக் கடுமையாகச் சாடினார்.
English Summary
MK Stalin Slams TVK Governance Welcomes Ex Minister Benjamin into DMK