"பொதுவெளியில் போதைப்பொருள் சர்ச்ச வீடியோ" - அமைச்சர் சரத்குமாரை நீக்கக் கோரி திமுக மாணவரணி மாபெரும் ஆர்ப்பாட்டம்!
DMK Student Wing Announces Protest Demanding Dismissal of Minister Sarathkumar
பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரத்தில், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசின் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி. சரத்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, எதிர்க்கட்சியான திமுகவின் மாணவர் அணி சார்பில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக வெளியிட்ட அதிரடி அறிக்கை
இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "இளைஞர்களையும் சமுதாயத்தையும் சீரழிக்கும் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரின் கடமையாகும். ஆனால், ஆளும் தவெக அரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் செயல்பாடுகள் முற்றிலும் அதற்கு மாறாக, பொறுப்பற்ற முறையில் அமைந்துள்ளன.
மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி. சரத்குமார், போதைப்பொருளைப் பயன்படுத்துவது போன்ற ஒரு வீடியோ, உலக போதைப்பொருள் ஒழிப்பு நாளன்றே வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதற்கு விளக்கமளிக்கிறேன் என்ற பெயரில், தவெகவின் வழக்கமான பாரம்பரியப்படி ஒரு குழந்தைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அவர் அரசியல் செய்கிறார். அவர் போதைப்பொருள் பயன்படுத்தினாரா இல்லையா என்று பட்டிமன்றம் நடத்துவதைவிட, பொதுவெளியில் போதைப்பொருள் பயன்படுத்துவது போல் வீடியோ எடுத்து, அதனை 'Thug Life Moment' என்று ரீல்ஸ் (Reels) ஆக வெளியிட்டு இளைஞர்களைத் தவறான பாதைக்கு ஊக்குவித்த அவரது செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்
"இத்தகைய போக்குடைய ஒருவர் அமைச்சரவையில் தொடர்வது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு எவ்வித நன்மையும் தராது என்பதால், அமைச்சர் சரத்குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, திமுக மாணவர் அணி சார்பில் நாளை 29-06-2026 (திங்கட்கிழமை) அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் 'மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்' நடைபெறும். இதில் மாணவரணி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்" என திமுக கேட்டுக்கொண்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் மீதும் சாடல்
மேலும் அந்த அறிக்கையில் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆகியோர் குறித்தும் கடுமையான விமரிசனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. "'தண்ணிய அடிப்பதில் தப்பு ஒன்னும் இல்லடா', 'பத்தாது பாட்டில் நான் குடிக்க' போன்ற தத்துவப் பாடல்கள் மூலம் ரசிகக் கூட்டத்தை உருவாக்கிய முதலமைச்சரின் அமைச்சரவையில் உள்ளவர்கள், இன்னுமும் அதே ரசிக மனநிலையிலேயே வலம் வருகின்றனர்.
அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது கையில் முதலமைச்சர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற 'டாட்டூ' (Tattoo) வரைந்துகொண்டு, அவரது தத்துவப் பாடல்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்கிறார். இதனையெல்லாம் கண்டித்து நல்வழிப்படுத்த வேண்டிய முதலமைச்சரோ, இவற்றை ரசிக்கும் மனநிலையில் தேங்கி நிற்கிறார். அமைச்சர்களின் இத்தகைய மாண்பற்ற போக்குகளுக்கு முதலமைச்சர் விஜய் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று திமுக மாணவரணி தனது அறிக்கையில் வேதனையுடன் வலியுறுத்தியுள்ளது. இந்த ஆர்ப்பாட்ட அறிவிப்பு தவெக மற்றும் திமுக இடையே அரசியல் ரீதியான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
English Summary
DMK Student Wing Announces Protest Demanding Dismissal of Minister Sarathkumar