"முதலமைச்சரின் உடல்மொழி மனித மாண்புக்கு எதிரானது": எமர்ஜென்சி பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து திருமாவளவன் அறிக்கை!
VCK Chief Thirumavalavan Criticizes CM Vijay Assembly Body Language Urges Law Minister to Retract MISA Remarks
சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நடந்துகொண்ட விதம் மற்றும் சட்டத்துறை அமைச்சரின் பேச்சு தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) நிறுவனத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் கடுமையான கருத்துகளைக் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சரின் உடல்மொழி குறித்த விமர்சனம்:
சட்டப்பேரவையில் முதலமைச்சரின் பதிலுரையின்போது, திமுக தலைவரைக் கேலி செய்யும் வகையில் அவரது உடல்மொழி அமைந்திருந்ததாக எழுந்த விமர்சனங்களுக்கு, முதலமைச்சர் தரப்பில் 'அது உள்நோக்கம் கொண்டதல்ல' என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுபோன்ற 'உடல்மொழிகள்' கண்ணியமான அணுகுமுறை இல்லை என்பதையும் மனித மாண்புகளுக்கு எதிரானது என்பதையும் சுட்டிக்காட்டுவதாகத் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு சூழலிலும் ஒருவரின் 'தன்மதிப்பைக்' காயப்படுத்துவது நாகரிகம் ஆகாது என்றும், அகவையில் மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்தது என்பதால், மாண்பு நிறைந்த பொறுப்பிலுள்ள முதலமைச்சர் இனிவரும் காலத்தில் தனது உடல்மொழியில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
சட்டத்துறை அமைச்சரின் பேச்சுக்குக் கண்டனம்:
அடுத்தநாள் சட்டப்பேரவையில் முதலமைச்சரின் உரையில் சில பகுதிகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என திமுக கோரியபோது, இடைமறித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சரின் கருத்து 'வரலாற்றுப் பிழை' எனத் திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மிசா காலத்து அரசப்பயங்கரவாத ஒடுக்குமுறைக்குள்ளான திமுக தலைவர் குறித்து முற்றிலும் தவறான கருத்தினைப் பதிவு செய்தது கண்டனத்துக்குரியது என்றும், சட்டத்துறை அமைச்சர் தனது பேச்சை உடனடியாகத் திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டும் என்றும் VCK சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தவெக தலைமையிலான 'மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி'யில் அங்கம் வகிக்கும் முக்கியக் தோழமைக் கட்சியின் தலைவரான தொல். திருமாவளவன், முதலமைச்சரின் அணுகுமுறை மற்றும் அமைச்சரின் பேச்சைப் பகிரங்கமாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருப்பது அரசியல் களவில் முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
English Summary
VCK Chief Thirumavalavan Criticizes CM Vijay Assembly Body Language Urges Law Minister to Retract MISA Remarks