தமிழகத்தில் உருவானது புதிய 'மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி'! விஜய் தலைமையில் தவெக கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் முடிவு..?!
TVK-Led Coalition Named Secular Social Justice Victory Alliance at Panaiyur Meeting Chaired by CM Vijay
சென்னை பனையூரில் உள்ள ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகத்தில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளின் முக்கிய ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், தவெக தலைமையிலான கூட்டணிக்கு ‘மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், தவெக தலைமையிலான கூட்டமைப்பை முறைப்படுத்தவும், ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது மற்றும் பொதுக் குறைந்தபட்சத் திட்டத்தை (Common Minimum Programme) உருவாக்குவது குறித்தும் விவாதிக்க இக்கூட்டம் கூட்டப்பட்டது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்ரவர்த்தி, சட்டமன்றக் கட்சித் தலைவர் தாரகை கத்பர்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) தலைவர்கள் கே.எம். காதர் மொகிதீன், ஏ.எம். ஷாஜஹான் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
அதேவேளையில், தவெக அரசுக்கு வெளியிலிருந்து கொள்கை ரீதியான ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளான சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) ஆகிய இடதுசாரி இயக்கங்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்த்துள்ளனர்.
வரும் அக்டோபர் 6-ஆம் தேதி தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளிடையேயான ஒருங்கிணைந்த தேர்தல் பிரச்சார வியூகம் மற்றும் கூட்டமைப்பின் பெயர் முறைப்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்ட இக்கூட்டத்தில் ‘மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி’ எனப் பெயரிடப்பட்டிருப்பது மாநில அரசியல் களத்தில் மிக முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
English Summary
TVK-Led Coalition Named Secular Social Justice Victory Alliance at Panaiyur Meeting Chaired by CM Vijay