கரூர் அருகே பள்ளிப் பேருந்து மீது லாரி மோதி விபத்து: 10 மாணவிகள், 06 மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் படுகாயம்..!
17 people including the driver and students seriously injured after a lorry collided with a school bus near Karur
கரூர் அருகே பள்ளி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 10 மாணவிகள், 06 மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் உள்ளிட்ட 17 பேர் காயமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே இயங்கிவரும் தனியார் மேல்நிலைப் பள்ளிக்கு இன்று (செப்.9) காலை மாணவ, மாணவிகளை அழைத்து வருவதற்காக பள்ளிப் பேருந்து கிராமம், கிராமமாக சென்று மாணவ, மாணவிகளை ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தது.
அப்போது பாலவிடுதி செங்காட்டுப்பட்டி பகுதியில் மாணவ, மாணவிகளுடன் பள்ளி பேருந்து வந்து கொண்டிருந்தபோது அவ்வழியாக மாட்டுத் தீவனம் ஏற்றி சென்ற லாரி, எதிர்பாராத விதமாக பள்ளிப் பேருந்து மீது மோதியுள்ளது. இதில் பள்ளி வாகனத்தின் முன்பக்கம் சேதமடைந்து கண்ணாடிகள் உடைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் தாஸ் (31), மாணவிகள் 10 பேர், 06 மாணவர்கள் என 17 பேர் காயமடைந்துள்ளனர். இதில் சிலருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. காயமடைந்த அனைவரும் மைலம்பட்டி அரசு மருத்துவனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக, அனைவரும் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து பாலவிடுதி போலீஸார், லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
17 people including the driver and students seriously injured after a lorry collided with a school bus near Karur