கோவை செம்மொழி பூங்கா திட்டப் பணிகளில் சுமார் ரூ.40 கோடி வரை ஊழல்..? உடனடி நடவடிக்கை தேவை; வானதி சீனிவாசன்..!
Vanathi Srinivasan says immediate action is needed regarding corruption in the Coimbatore Semmozhi Park project
'கோவை செம்மொழி பூங்கா திட்டப் பணிகளில் சுமார் ரூ.40 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக வெளியாகும் செய்திகள் கடும் அதிர்ச்சி அளிக்கிறது. முறைகேடாக பயன்படுத்தப்பட்ட மக்களின் வரிப்பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது;
''கோவை செம்மொழி பூங்கா திட்டப் பணிகளில் சுமார் ரூ.40 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக தென்மண்டல ஒப்பந்ததாரர்கள் சங்கம் புகார் அளித்துள்ளதாகக் கூறப்படும் செய்தியானது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.
எந்தத் திட்டங்களில் எவ்வளவு கமிஷன் கிடைக்கும், எவ்வளவு ஊழல் செய்யலாம் என்று நாடி நரம்பெல்லாம் ஊழல் ஊறிப்போன கடந்த கால திமுக ஆட்சியின் மற்றொரு ஊழல் முறைகேடு இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சுமார் 40 கோடி ரூபாய் அளவுக்கு போலி பில்கள் தயாரித்து கோவை மாநகராட்சி நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது மக்கள் வரிப்பணம் எந்த அளவுக்கு குறிப்பிட்ட சிலரால் சூறையாடப்பட்டிருக்கிறது என்பதற்கான சாட்சி.
மேலும், அதே புகாரில் தேர்தல் செலவுக்காக 5 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட சாலைகளைத் தேர்வு செய்து மீண்டும் அதில் பணிகள் மேற்கொண்டு அதிலும் முறைகேடு செய்திருப்பதாகக் கூறப்படுவது அதிர்ச்சியிலும் பேரதிர்ச்சி. இவற்றையெல்லாம் பார்க்கும் போது ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...‘ என்னும் பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

இந்த முறைகேடு குறித்து இன்றைய கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்திலும் விவாதம் எழுப்பப்பட்டு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
முதல்வர் விஜய் ஊழல் கறைபடியாத ஆட்சி அமைப்பேன் என்று உறுதி கூறி பதவியேற்றிருக்கும் உங்கள் அரசு இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யார் எனக் கண்டறிந்து, அதற்கு துணைபோன அதிகாரிகள், ஒப்பந்தகாரர்கள் ஆகியோரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை மூலம் வழக்குப் பதிவு செய்து, முறைகேடாக பயன்படுத்தப்பட்ட மக்களின் வரிப்பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Vanathi Srinivasan says immediate action is needed regarding corruption in the Coimbatore Semmozhi Park project