''அனைத்து நாடுகளுக்கும் ஏஐ பலன்கள் கிடைக்க வேண்டும்''; உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் ஐ.நா பொதுச் செயலர் உரை..! - Seithipunal
Seithipunal


ஷாங்காயில் நடைபெற்ற உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டின் தொடக்க விழாவில்  ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ், உரையாற்றினார்.  அப்போது செயற்கை நுண்ணறிவு என்பது 21-ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய வாய்ப்பு. அனைத்து நாடுகளுக்கும் இதன் பலன்கள் கிடைக்கச் செய்ய வேண்டும். ஆனால், அது மிகப் பெரிய அபாயங்களில் ஒன்றாகவும் மாறக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மனிதகுலத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில்நுட்பம் முழு மனிதகுலத்தாலும் வடிவமைக்கப்பட வேண்டும் என்றும், செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்தை ஒரு சில நாடுகள் அல்லது நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது என்றும், ஒவ்வொரு நாட்டுக்கும் இதில் ஓர் இடம் தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், செயற்கை நுண்ணறிவு சார்ந்த தங்கள் நிபுணத்துவத்தை நாடுகள் பகிர்ந்துகொள்ள வேண்டும் எனவும், இந்த தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் வளரும் நாடுகளுக்கு வலுவான பங்கு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மருத்துவத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்தவும், கல்வியை மாற்றி அமைக்கவும், உணவு அமைப்புகளை வலுப்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் செயற்கை நுண்ணறிவுக்கு மகத்தான ஆற்றல் உள்ளது என்றும், இது நிலையான வளர்ச்சி இலக்குகளை முன்னெடுத்துச் செல்ல உதவும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், மனிதகுலத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் இன்னும் இணைய வசதி இன்றி உள்ளதாகவும், அதேநேரத்தில், கணினி ஆற்றல், தொழில்நுட்ப நிபுணத்துவம், முதலீடு ஆகியவை ஒருசில நாடுகள் மற்றும் நிறுவனங்களிடம் பெருமளவில் குவிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த ஏற்றத்தாழ்வுகள் சரிசெய்யப்படாவிட்டால், செயற்கை நுண்ணறிவு சமத்துவமின்மை அதிகரிப்பதற்கும், வருமானம், வாய்ப்பு, பாதுகாப்பு ஆகியவற்றில் பிளவுகளுக்கும் வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த இடைவெளியைக் குறைக்க உதவுவதற்காக சீனா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகள், ஐநா ஆதரவுடனான செயற்கை நுண்ணறிவுத் திறன் மேம்பாடு பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கான உலகளாவிய வலையமைப்புக்கு மையங்களை ஏற்கனவே பரிந்துரைத்துள்ளன என்று பேசியுள்ளார்.

அத்துடன், செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய நிதியத்துக்கான பரிந்துரைகள் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளன என்றும், இந்த இரு முயற்சிகளுக்கும் நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், செயற்கை நுண்ணறிவு அனைவருக்கும் பயனளிப்பதை உறுதி செய்வதற்கு, வளரும் நாடுகளில் இதற்கான திறனை விரிவுபடுத்த வேண்டும், சர்வதேச பாதுகாப்புத் தரங்களை நிறுவ வேண்டும், செயற்கை நுண்ணறிவு சுற்றுச்சூழலுக்கு மேலும் ஏற்றதாக மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், வளரும் நாடுகள் தங்களின் சொந்த தரவுகள், மொழிகள், நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்குவதற்கான கருவிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், அதேநேரத்தில் அரசாங்கங்கள் சர்வதேச சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சோதனை மற்றும் இடம் மேலாண்மைக்கான பொதுவான அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

எந்த ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பும் பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்படுவதற்கு முன்பாக குழந்தைகளிடம் கொடுக்கப்படக்கூடாது என்று பேசியுள்ளார்.

அதேநேரம், செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் மாற்றம், ஏற்றத்தாழ்வுகளை குறைக்குமா அல்லது அதிகரிக்குமா, அதிகாரத்தைக் குவிக்குமா அல்லது வாய்ப்புகளை விரிவுபடுத்துமா என்பதே தீர்மானிப்பதற்கான அளவுகோல் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UN Secretary Generals speech calls for all countries to benefit from AI


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->