முதல்வர் ஸ்டாலின், இனி இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்வாரா?! - Seithipunal
Seithipunal


பாஜக மகளிரணி தேசியத்தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ இன்று விடுத்துள்ள அறிக்கையில், "இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "திராவிடம் என்ற சொல்லை பிடிக்காதவர்கள், எங்களை, மதத்தின் விரோதிகளாகச் சித்தரிக்கிறார்கள்.

நாங்கள் மதவாதத்திற்குதான் எதிரிகளே தவிர, மதத்திற்கு எதிரிகள் அல்ல. மதம் - ஜாதி வேற்றுமை மட்டுமல்ல, கோயில் சாமி வேற்றுமையும் திராவிட மாடல் அரசுக்கு இல்லை" என்று பேசியிருக்கிறார்.

திராவிடம் என்ற சொல் யாருக்கும் பிடிக்காமல் போகாது. ஏனெனில், திராவிடம் என்பது இந்தியாவின் தெற்குப் பகுதியை குறிப்பது, திராவிடம் என்பது இனம் அல்ல. நிலப்பரப்பு.

தென் மாநிலங்களில் வசிப்பவர்கள் அனைவரும் திராவிடர்கள்தான். ஆங்கிலேயர்கள் தங்களது பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் திட்டமிட்டு உருவாக்கியதுதான் திராவிட இனவாதம். மதம் மாற்றுவதற்காக தமிழகம் அனுப்பி வைக்கப்பட்ட, கிறிஸ்தவ பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் உருவாக்கிய சூழ்ச்சிதான் திராவிட இனவாதம்.

அந்த சூழ்ச்சியால்தான், நீதிக்கட்சியும், திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் உருவாகியுள்ளது. அதனால்தான், திராவிடர் கழகமும், திமுகவும் தனி நாடு கோரிக்கையை முன்வைத்தார்கள்.

இந்தியா வலுவான தேசமாக உருவெடுத்ததாலும், தமிழக மக்களிடம் பிரிவினைவாதம் எடுபடவில்லை என்பதாலும், பிரிவினை பேசினாலும், வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால்தான், பிரிவினையை திமுக கைவிட்டது.

நாங்கள் மதவாதத்திற்குதான் எதிரி, மதங்களுக்கு அல்ல என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். மதங்களுக்கு எதிரி இல்லை என்றால், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துச் சொல்ல மறுப்பது ஏன் என்பதற்கு முதல்-அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.

மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்வது மட்டுமல்ல. அவர்களின் மத நிகழ்வுகளிலும் முதல்-அமைச்சர் உள்ளிட்ட தி.மு.க.வினர் கலந்து கொள்கின்றனர். கடந்த மாதம் கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய முதல்-அமைச்சரின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், "நானும் கிறிஸ்தவன்தான். நான் காதலித்து மணந்த மனைவியும் கிறிஸ்தவர்தான்" என பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை பேசிய அவருக்கு பாராட்டுகள். அதுபோல தி.மு.க.வில் இருக்கும் மற்ற தலைவர்களும், அமைச்சர்களும் நாங்கள் இந்துக்கள் என்று சொல்ல தி.மு.க. தலைமை அனுமதிக்குமா?. தி.மு.க. என்பது இந்து விரோத கட்சி என்பதை, அக்கட்சி ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறது.

குறைந்தபட்சம் இந்து பண்டிகைகளுக்கு கூட வாழ்த்து சொல்ல மனமில்லாத முதல்-அமைச்சர், நாங்கள் மதங்களுக்கு எதிரி அல்ல என்று சொல்வது, வழக்கம் போல, இந்துக்களை ஏமாற்றும் தந்திரம்தான்.

இதனை தமிழக மக்கள் நன்கறிவார்கள். இனியும் இதுபோன்ற வார்த்தை ஜாலங்களால் மக்களை ஏமாற்ற முடியாது. நாங்கள் மதங்களுக்கு எதிரி இல்லை என்பது முதல்-அமைச்சரின் உள்ளத்திலிருந்து வந்திருந்தால், இனி இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும்.

மற்ற மதங்களின் கோயில்கள், மடங்களில் தலையிடாத மதச்சார்பற்ற அரசு, இந்து மத கோவில்கள், மடங்களில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதுதான் மதங்களை மதிப்பது, அதுதான் உண்மையான மதச்சார்பின்மை." என்று அந்த அறிக்கையில் வானதி சிறீனிவாசன் தெரிவித்துள்ளார்.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vanathi sirivasan say about cm stalin hindu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->