ரஷ்யா - உக்ரைன் போர்.. யுத்தம் வேண்டாம்.. அமைதியே வேண்டும்.. அமெரிக்க மற்றும் ரஷ்ய தூதரகங்களில் அளிக்கப்பட்ட மனு.!! - Seithipunal
Seithipunal


ரஷ்யா - உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நேற்று (11.03.2022) சென்னை இராசரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து சிந்தாரிப்பேட்டை வரை நடைபெற்ற பேரணியின் நிறைவில் அமெரிக்க மற்றும் ரஷ்ய தூதரகங்களில் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கிழக்கு ஐரோப்பா வரையிலும் நேட்டோவை விஸ்தரிக்கக் கூடாது, உக்ரைனை நேட்டோ அமைப்பிற்குள் சேர்க்கக் கூடாது என வலியுறுத்தி ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு  மேலாக இலைமறைவு காயாக இருந்த விவகாரம் கடந்த மாதம் 24ஆம் தேதி ரஷ்யா - உக்ரைன் போராக மீண்டும் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது.

போர் துவங்கிய கடந்த 15 தினங்களில் இருதரப்பு ராணுவத்திற்கும் பெரிய இழப்புகளும்; உக்ரைன் நாட்டின் ராணுவம், போக்குவரத்து, நிர்வாகம், தொலைத்தொடர்பு மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டமைப்புக்களும் தகர்க்கப்பட்டுள்ளன.  உக்ரைனில் உள்ள 15-க்கும் மேற்பட்ட அணு மின் நிலையங்களில் பெரும்பாலானவற்றை இப்போது ரஷ்யா கைப்பற்றியுள்ளது. உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ், முக்கிய நகரமான கார்க்கிவ் போன்ற நகரங்கள் ரஷ்ய ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன. உக்ரைன் மக்களில் ஏறக்குறைய 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் போலந்து, ருமேனியா போன்ற அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் முக்கிய நகரங்களில் உள்ள பதுங்கு குழிகளிலும், பாதாள ரயில் நிலையங்களிலும் குடிநீர், உணவு, சுகாதார, அடிப்படை வசதிகள் இன்றி முடங்கிக் கிடக்கின்றனர். இருதரப்பு ராணுவத்திற்கும் பெருத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

உக்ரைன் நாடே போர் பதட்டத்திற்கு ஆளானதால் அங்கு கல்விக்கூடங்களும் செயல்பட முடியவில்லை. மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி கற்கச் சென்ற 20,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கிடையே வெளியேற்றப்பட்டு தாய் தேசத்திற்கு அழைத்து வரப்பட்டு இருக்கின்றனர். கர்நாடகா மற்றும் வடக்கு மாநிலத்தைச் சேர்ந்த இரு இந்திய மாணவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். இன்னும் பல்வேறு நாடுகளைச் சார்ந்த மாணவர்கள் வெளியேற முடியாமல் உக்ரைன் நாட்டிலேயே தத்தளித்து வருகின்றனர். இப்போரில் உக்ரைன் நாட்டைச் சார்ந்த 32 குழந்தைகள் இறந்து விட்டதாக வரக்கூடிய செய்திகள் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன. குடியிருப்புகள் மீது விழக்கூடிய shell தாக்குதல்களிலிருந்து தப்பிக்க 80-90 வயது முதியவர்களை, தட்டுத்தடுமாறி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் காட்சிகள் கண்ணீரை வரவழைக்கின்றன. ரஷ்யப் படைகளின் முக்கிய நகரங்களின் முற்றுகையால் அதில் சிக்கியுள்ள லட்சக்கணக்கானவர்களின் கதி என்ன என்பது மிகப்பெரிய அச்சமாக இருக்கிறது.

விஞ்ஞான உலகில் எல்லா மக்களும் எல்லாவிதமான நன்மைகளையும் பெற்று மகிழ்வோடு வாழ வேண்டிய காலகட்டத்தில் கோடிக்கணக்கான மக்கள் போரில் சிக்கி அவதிப்பட வேண்டிய அவசியம் என்ன? உலகமே அமைதியை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளபோது, ரஷ்யா, உக்ரைன் நாடுகள் மோதிக் கொள்வது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்? உக்ரைன் மீதான அரசியல் படையெடுப்பைத் தடுக்கக்கூடிய வகையில் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளும், உலகின் பல நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு எப்படி சாதாரண மக்களை பாதிப்புக்குள்ளாக்குமோ? அதேபோலதான் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளும் ரஷ்யாவில் உள்ள 15 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். இதுவும் ஒருவித போர்தான். ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீதான போருக்கு எல்லைப் பிரச்சனை காரணமில்லை என்றாலும் பரஸ்பரம் இரு நாடுகளுடைய பாதுகாப்பு குறித்து சந்தேகமே இப்பொழுது ஒரு மிகப்பெரிய யுத்தத்தில் முடிந்திருக்கிறது.

இறையாண்மை பெற்ற எந்த நாடும் எவ்விதமான தாக்குதலுக்கும் ஆளாகக் கூடாது. அந்த வகையில் நேட்டோ கிழக்கு ஐரோப்பா வரை விஸ்தரிக்கப்படும் பட்சத்திலும், உக்ரைன் நேட்டோவில் சேர்க்கப்படும் பட்சத்திலும் அது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் எனும் ரஷ்யாவின் கருத்தையும் புறந்தள்ளி விடாமலும், எஸ்டோனியா, ருமேனியா, போலந்து, பெலாரஸ், உக்ரைன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கி இருந்த USSR என்ற கூட்டமைப்பை ரஷ்யா மீண்டும் விஸ்தரிக்க கூடும் என்ற சந்தேகத்தையும் புறந்தள்ளி விடாமல் நடுநிலையோடு இந்த விஷயத்தை அணுகி, ஒரு தேசம் இன்னொரு தேசத்திற்குப் பாதுகாப்பை அளிக்க வேண்டுமே தவிர, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது என்ற நிலையை அடைய உடனடியாக இப்போது நடைபெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தப்பட வேண்டும்.

அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் பேசி அமைதிக்கு வழி காண வேண்டும். இப்போரினால் உக்ரைன் தேசமும் பெரிய அழிவையும், பாதிப்பையும் சந்தித்துள்ளது. அதேபோல ரஷ்யாவும் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரத் தடையால் எதிர்காலத்தில் பெரும்பாலான பாதிப்புகளைச் சந்திக்கும். அது மட்டுமல்ல இந்த போரில் சம்பந்தப்படாத பல நாடுகளும், நாட்டின் மக்களும் பல்வேறு விதமான துயரங்களுக்கும் ஆளாகுவார்கள். குறிப்பாக கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக பெட்ரோல், டீசல் விலை இரண்டு மடங்கு உயர அதிக வாய்ப்பு உள்ளது. இவையெல்லாம் இன்னும் வளராமல் இருக்க கூடிய நாடுகளுக்கு மிகப் பெரிய சுமையாக அமையும். அதே போல ஏற்றுமதி இறக்குமதிகள் பாதிக்கப்படுகின்ற போது உலகெங்கும் உணவு தட்டுப்பாடுகளும் வரலாம்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இது போன்ற ஒரு யுத்தத்தை உலகம் சந்தித்திருக்க வாய்ப்பில்லை. உலகில் இந்த ரஷ்யா - உக்ரைன் யுத்தம் அரசியல், பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இப்பொழுதே இந்த போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு அமைதி திரும்பவில்லை எனில், அது அணு ஆயுத மூன்றாம் உலகப் போராக மூண்டு உலகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

உலகின் எந்த மூலையிலும் நடக்கக்கூடிய சண்டைகளும் சச்சரவுகளும் அந்த பகுதி மக்களுக்குப் பாதிப்பை உண்டாக்குவதை காட்டிலும் சில நேரங்களில் தூரத்தில் இருக்கக் கூடியவர்களுக்கு அதிக பாதிப்பை உண்டாக்கலாம். எனவே இப்பொழுது இரு நாடுகளுக்கு இடையே நடைபெறக்கூடிய யுத்தம் தடுக்கப் படாவிட்டால், இது உலக பேரழிவை உருவாக்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதால் இதை தங்களுடைய நாட்டுத் தலைமைகள் பரந்துபட்ட கண்ணோட்டத்தோடு அணுகி, உலக மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்ற அடிப்படையில் போர் நிறுத்தத்தை உடனடியாக அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

எனவே ரஷ்யா, அமெரிக்கா, உக்ரைன் நாட்டிற்கான தலைமைகளுக்கு அந்நாட்டின் தூதர்கள் எங்களது கட்சியின் உணர்வுகளையும் மற்றும் பாரத தேச மக்களின் உணர்வுகளையும் விரைந்து எடுத்துரைத்து, உரிய அழுத்தம் கொடுத்து போரை நிறுத்தவும், அமைதியை நிலைநாட்டவும் மீண்டும் வலியுறுத்துகிறோம். புதிய தமிழகம் கட்சி மாநில அளவில் விளிம்புநிலை மக்களுக்காக செயல்படக்கூடிய கட்சி என்றாலும் கூட, உலகளவில் அனைத்து மக்களுடைய மேன்மையான வாழ்க்கையையும், அமைதியையும் விரும்பக் கூடிய கட்சி என்ற அடிப்படையில் இம்மனுவை தங்களிடம் சமர்க்கிறோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ukraine russia war krishnasamy protest


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->