தமிழக அரசியலில் தற்போது அதிகம் பேசப்படும் விஷயங்களில் ஒன்றாக தமிழக வெற்றிக் கழகத்தின் ‘ஆள் தூக்கும்’ அரசியல் மாறியுள்ளது. குறிப்பாக அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருவது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
பாஜக அல்லது திமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்களை குறிவைக்காமல், அதிமுகவை சேர்ந்த செல்வாக்கு மிக்க நிர்வாகிகளை மட்டும் தவெக தொடர்ந்து இழுத்து வருவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் பின்னணியில் விஜய்யின் நீண்டகால அரசியல் திட்டம் இருப்பதாக தவெக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
எதிர்கால தமிழக அரசியல் களம் ‘தவெக Vs திமுக’ என்ற இரு துருவ போட்டியாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதே விஜய்யின் திட்டம் என்றும், அதற்காகவே அதிமுகவின் முக்கிய தலைவர்களை தவெக குறிவைத்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், தனித்து ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பல்வேறு கட்சிகள் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளித்ததாகவும், இதையடுத்து சில கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் தவெகவின் அரசியல் நகர்வுகள் அதோடு நின்றுவிடவில்லை. அதிமுகவை சேர்ந்த பல எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சிலர் விரைவில் தவெகவில் இணையலாம் என்ற தகவல்களும் அதிமுக தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட மேலும் பல முக்கிய தலைவர்களும் தவெகவில் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் நாட்களில் மேலும் சில முக்கிய நிர்வாகிகள் தவெக பக்கம் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.இந்த தொடர்ச்சியான கட்சித் தாவல்கள், அதிமுகவுக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக, பாஜக உள்ளிட்ட மற்ற கட்சிகளை விட்டுவிட்டு அதிமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்களை மட்டும் தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து குறிவைப்பது ஏன் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
இது தற்செயலான அரசியல் நகர்வு அல்ல என்றும், விஜய்யின் திட்டமிட்ட நீண்டகால வியூகம் என்றும் தவெக தரப்பினர் கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியலில் ஆளும் கட்சிக்கு வலுவான எதிர்க்கட்சி அவசியம். ஆனால் அந்த எதிர்க்கட்சி அதிமுகவாக இருக்கக் கூடாது; திமுகவாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதே விஜய்யின் அரசியல் கணக்கு என்று கூறப்படுகிறது.
அதாவது, தமிழக அரசியல் களம் எதிர்காலத்தில் தவெக மற்றும் திமுக என்ற இரண்டு பெரிய சக்திகளை சுற்றியே அமைய வேண்டும் என்பதே விஜய்யின் இலக்கு என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
தற்போதைய ஐந்து ஆண்டு ஆட்சியை மட்டும் கணக்கில் கொண்டு விஜய் செயல்படவில்லை என்றும், அதற்குப் பிறகும் தமிழக வெற்றிக் கழகத்தை மிகப்பெரிய அரசியல் சக்தியாக நிலைநிறுத்துவதற்கான பணிகளை இப்போதே தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாகவே அதிமுகவில் இருந்து செல்வாக்கு மிக்க தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை தவெகவுக்கு கொண்டு வரும் முயற்சி நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
தற்போது விஜய்யின் தனிப்பட்ட செல்வாக்குதான் தமிழக வெற்றிக் கழகத்தின் மிகப்பெரிய பலமாக உள்ளது. ஆனால் தமிழகம் முழுவதும் கட்சியை வலுப்படுத்த வேண்டுமென்றால், இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட அளவில் செல்வாக்கு மிக்க நிர்வாகிகள் அவசியம் என்பதை விஜய் உணர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் வலுவான கட்சி கட்டமைப்பை உருவாக்க, மாவட்ட அளவில் தனிப்பட்ட செல்வாக்கும் தொண்டர் பலமும் கொண்ட தலைவர்கள் தேவை என்பதே தவெக தலைமையின் கணக்காக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால்தான் விஜயபாஸ்கர் உள்ளிட்ட மாவட்ட அளவில் செல்வாக்கு கொண்ட தலைவர்களை தவெகவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
புதிய கட்சியான தவெகவுக்கு அனைத்து மாவட்டங்களிலும் வலுவான நிர்வாக கட்டமைப்பை புதிதாக உருவாக்குவது நீண்டகாலம் எடுக்கும். ஆனால் ஏற்கனவே அரசியல் அனுபவமும், தொண்டர் பலமும், மாவட்ட செல்வாக்கும் கொண்ட தலைவர்களை இணைத்துக் கொண்டால், குறுகிய காலத்திலேயே கட்சியை வலுப்படுத்த முடியும் என்பதே இந்த வியூகத்தின் பின்னணி என கூறப்படுகிறது.
தமிழகத்தில் காங்கிரஸின் ஆதிக்கம் முடிவுக்கு வந்த பிறகு, பல ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக என்ற இரு துருவ அரசியலே நிலவி வருகிறது.ஆனால் தற்போது தவெகவின் எழுச்சியால் திமுக, அதிமுக மற்றும் தவெக என மும்முனை அரசியல் களம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மும்முனை அரசியலை மீண்டும் இரு துருவ அரசியலாக மாற்ற வேண்டும் என்பதே விஜய்யின் திட்டம் என்றும், ஆனால் அந்த இரு துருவங்களில் அதிமுகவுக்கு பதிலாக தவெக இடம்பெற வேண்டும் என்பதே அவரது அரசியல் இலக்கு என்றும் கூறப்படுகிறது.
அதாவது, எதிர்கால தமிழக அரசியல் ‘திமுக Vs தவெக’ என்ற நேரடி போட்டியாக மாற வேண்டும் என்பதற்காகவே அதிமுகவின் முக்கிய தலைவர்களை தவெக தொடர்ந்து இழுத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.விஜய்யின் இந்த அரசியல் வியூகத்தால் தற்போது அதிக பாதிப்பை சந்தித்திருப்பது அதிமுகதான் என்று கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தல் தோல்வி, அதற்குப் பிறகு கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தி, மூத்த தலைவர்களின் வெளியேற்றம் மற்றும் கட்சியில் தொடர்ந்து வரும் நிர்வாகிகளின் போர்க்கொடி என பல்வேறு சிக்கல்கள் அதிமுகவின் அடித்தளத்தையே அசைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதேநேரத்தில், அதிமுக முழுமையாக பலவீனமடைந்துவிட்டது என்று கூற முடியாது.
அதிமுகவின் மிகப்பெரிய பலமாக இன்னும் ‘இரட்டை இலை’ சின்னம் உள்ளது. கட்சித் தலைமை மீது தொண்டர்களுக்கு அதிருப்தி இருந்தாலும், அதிமுகவின் கொள்கைகள் மற்றும் இரட்டை இலை சின்னத்துக்கென தமிழகத்தில் தனி வாக்கு வங்கி இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால் கட்சியில் இருந்து வெளியேறும் தலைவர்களை சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வர வேண்டும், அடிமட்ட தொண்டர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், தலைமை மீது எழுந்துள்ள அதிருப்தியை சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிமுகவுக்குள் வலுத்து வருவதாக கூறப்படுகிறது.
அப்படி ஒரு மாற்றம் நடந்தால், அதிமுக மீண்டும் தனது பழைய பலத்தை பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் வியூகம் வெற்றி பெற்று எதிர்கால தமிழக அரசியல் ‘தவெக Vs திமுக’ என்ற இரு துருவ போட்டியாக மாறுமா? அல்லது தற்போதைய நெருக்கடிகளில் இருந்து மீண்டு அதிமுக மீண்டும் தனது பழைய பலத்தை பெறுமா? என்பதே தமிழக அரசியலில் தற்போது எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.