''எங்கள் நிலத்தில் எங்கள் மொழிக்கே முன்னுரிமை''; சட்ட முன்னெடுப்புத் தேவை எனில், அதற்கும் தயார்; தவெக..!
TVK says that our language has priority in our land
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட விவகாரம் தற்போது தமிழக அரசியல் களத்தில் மீண்டும் புகைச்சலை கிளப்பியுள்ளது.
இதற்கு பல அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஆளும் தவெக அரசும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதாவதும் ''ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி அல்லது ஆளுநராக இருந்தாலும் சரி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம். எங்கள் நிலத்தில் எங்கள் மொழிக்கே முன்னுரிமை. இதை உறுதியாக நாம் நிலைநாட்டுவோம்.'' எனக் குறிப்பிட்டுள்ளது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சி குறித்தான அறிவிப்பின்போது, இந்த பல்கலைக் கழகத் துணை வேந்தர் சந்திரசேகர், ''தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட வேண்டும் என ராஜ்பவனில் இருந்து உத்தரவு வந்துள்ளது. அதுவே பின்பற்றப்படும்'' எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்த நிலையில், உயர்கல்வித் துறை அமைச்சரான விஸ்வநாதன் விழாவினை புறக்கணித்தார். இந்நிலையில், இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அறிவித்தபடி, மூன்றாவதாக பாடப்பட்டது.
இந்நிலையில் தவெக, ''நமது மனசாட்சி உள்ள மக்களாட்சியில் யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும். எம் தாய்மொழியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். அதற்குக் காரணமாக ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி அல்லது ஆளுநராக இருந்தாலும் சரி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம். எங்கள் நிலத்தில் எங்கள் மொழிக்கே முன்னுரிமை. இதை உறுதியாக நாம் நிலைநாட்டுவோம். சட்ட முன்னெடுப்புத் தேவை எனில், அதற்கும் தயாராகவே இருக்கிறோம்.'' என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
English Summary
TVK says that our language has priority in our land