17 ஆண்டுகால பழிக்குப்பழி; சென்னை தவெக பிரமுகர் படுகொலை... கல்லூரி மாணவன் கொடுத்த வாக்குமூலம்!
TVK Leader Hacked to Death in Chennai College Student and 3 Schoolboys Arrested Over 17 Year Revenge Feud
சென்னை பெசன்ட் நகர் வண்ணான்துறை பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகப் (தவெக) பிரமுகர் கண்ணன் (செப்டம்பர் 5) இரவு ஓடஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கல்லூரி மாணவருடன் இணைந்து பள்ளி மாணவர்களும் தாக்குதலில் ஈடுபட்டிருப்பது காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இக்கொலை வழக்கு தொடர்பாக அடையாறு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான பரணி (20) மற்றும் அவரது நண்பர்கள் ராகேஷ், நரேஷ், ஹரிஹரன், மணிகண்டன் ஆகிய 5 பேரை காவல்துறையினர் முதல்கட்டமாகக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், இக்கொடூரச் சம்பவத்திற்குப் பின்னணியில் 17 ஆண்டுகாலப் பழிவாங்கும் பகை இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2009-இல் பரணியின் பெரியப்பா சிவாவும், 2016-இல் தந்தை வேலுவும் படுகொலை செய்யப்பட்டதற்குப் பிரமுகர் கண்ணனே முக்கியக் காரணம் என பரணி கருதியுள்ளார். சமீபத்தில் கண்ணன் தவெகவில் இணைந்து பகுதியில் செல்வாக்குடன் வலம் வந்ததால் ஆத்திரமடைந்த பரணி, தனது குடும்பப் பகைக்குப் பழிதீர்க்கத் திட்டம் தீட்டிக் கொலையை அரங்கேற்றியுள்ளார்.
தற்போது இக்கொலை வழக்கில் மேலும் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் 3 பேர் பள்ளி மாணவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கல்லூரி மாணவர் பரணியின் தூண்டுதலின் பேரில், அவரோடு சேர்ந்து பள்ளி மாணவர்களும் இக்கொலையில் நேரில் ஈடுபட்டிருப்பது காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகச் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொலையின் முழு பின்னணி குறித்தும் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, தலைநகரில் அரங்கேறியுள்ள இந்தத் துணிகரப் படுகொலை சம்பவத்தைச் சுட்டிக்காட்டியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், தவெக ஆட்சி என்பது ஒரு "செயலிழந்த அரசாங்கம்" என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
English Summary
TVK Leader Hacked to Death in Chennai College Student and 3 Schoolboys Arrested Over 17 Year Revenge Feud