பத்திரிகை செய்தியை கோடிட்டு காட்டிய மு.க.ஸ்டாலின்; ''திமுக தன் முகமூடியைத் தானே கழற்றிக்கொண்டு அம்பலப்பட்டு நிற்பதும் தொடர்கதைதான்'' என பதிலடி கொடுத்துள்ள தவெக..!
TVK has responded to MK Stalin for leaking the newspaper article
''சம்பந்தமில்லாத விசயங்களில்கூட மூக்கை நுழைத்து, மூக்கறுபட்டாலும், விளம்பரம் தேடி, விளம்பர மோகத்திலேயே ஊறிக் கிடக்கும் ஸ்டாலின் சாருக்கும் திமுகவுக்கும் இது ஒன்றும் புதிதில்லைதான்.'' என திமுகவை தவெக ஐ.டி.விங் எக்ஸ் கடுமையாக சாடியுள்ளது.
பிரபல நாளிதழ் ஒன்றில் இன்றைய தலையங்கம். ''ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்கிடப் பார்க்கும் த.வெ.க. அரசு'' என விரித்து அரசியல் கட்டுரை வெளியாகியுள்ளது.
இதனைத் திமுக தலைவர் ஸ்டாலின் பகிர்ந்து, ''நம் முதலமைச்சருக்குப் புரிவது போல சொல்லவேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும் பத்திரிகையின் நடுப்பக்கம் அவரது தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது. ஆட்சியின் அலங்கோலங்களை எல்லாம் கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று இந்த அரசு எண்ணினால் மக்களே அந்த ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்'' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தவெக ஐடி விங்க்ஸ் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பதில் அளித்து குறிப்பிட்டுள்ளதாவது; ''தங்கள் குடும்ப உறவினர் பத்திரிகையில் எழுதப்பட்டதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார், ஸ்டாலின் சார். அதுவும் அவருக்குப் புரியும் வகையில் எழுதப்பட்டது என்பதாலோ என்னவோ, இன்புற்றுக் கோடிட்டுக் காட்டுகிறார். குதூகலிக்கிறார். அதற்கு ஆதரவாகக் கொடியும் பிடிக்கிறார்.
வெகுஜன மக்கள் இயல்பாகக் கூடும் இடங்களான டீக்கடைகளிலும் சலூன் கடைகளிலும் சைக்கிள் கடைகளிலும்தான் திமுக வளர்ந்தது என்று பெருமை பேசும் திமுகவிற்கும் ஸ்டாலின் சாருக்கும் ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறோம். மேலே குறிப்பிடப்பட்ட அந்தக் கடைகளில் எல்லாம் பொதுமக்கள் வெகுவாகப் படிக்கும் பாரம்பரியப் பத்திரிகை, தினத்தந்தியும்தான். அந்தத் தினத்தந்தியில் எழுதப்பட்ட தலையங்கங்களை எல்லாம் ஸ்டாலின் சார் படித்ததே இல்லையோ? ஒருவேளை, அவை எல்லாம் ஸ்டாலின் சாருக்குப் புரிகிற மொழியில் எழுதப்படவில்லையோ?
இருந்தாலும் ஸ்டாலின் சாருக்கு ஒரு நினைவூட்டல். மனசாட்சி உள்ள மக்களாட்சியான நம் டிவிகே ஆட்சி வந்த பிறகுதான், ‘ஊழலின் ஊற்றுக்கண் அடைக்கப்படுகிறது’ என்று தினத்தந்தி தலையங்கம் எழுதியது. அது மட்டுமா எழுதியது? தவெக ஆட்சி வந்த பிறகு ‘அரசு அலுவலகங்களில் நேர்மை வாசனை வீசத் தொடங்கிவிட்டது’ என்றும் ஒரு தலையங்கத்தில் சொன்னது. ‘லஞ்சம் இல்லாத ஒரு புதிய விடியல் தொடங்கியது’ என்றும் இன்னொரு தலையங்கத்தில் குறிப்பிட்டது.
திமுகவின் எம்.எல்.ஏ.க்களுக்கு வன்மத்தை ஊட்டி வளர்த்து, ஆபாச அர்ச்சனையைச் செய்ய வைத்துவிட்டு, இப்போது அதற்கு வக்காலத்து வாங்கும் ஸ்டாலின் சாருக்கு, மக்கள் விரும்பும் முதல்வர், தமிழ்நாடு முதலமைச்சரின் நேர்மையான, லஞ்ச ஊழலற்ற நிர்வாகம் கண்டு நெஞ்சம் பதறுகிறது. அதனால்தான் திசைதிருப்பும் வேலைகளில் திமுகவை ஈடுபடுத்துகிறார்.
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் தவெகவின் சமரசமற்ற ஒரே நிலைப்பாடு. இளைஞர்களால் உருவான அஹிம்சை வழிப் போராட்டத்தை இளைஞர்களின் எஃகுக் கோட்டையான தவெக, 100% ஆதரிக்கத்தானே செய்யும்?
அது நம் மக்களுக்கே நன்றாகத் தெரியும். ஆனால், மாநில அரசுக்கு அதிகாரமே இல்லாதபோதும், ஓட்டு வாங்குவதற்காக நீட்டை நீக்குவோம் என்று பொய் சொல்லி ஏமாற்றியது யார் என்றும் நம் தமிழக மக்களுக்கு இன்னும் நன்றாகவே தெரியும். ஒன்றிய அரசின் மந்திரி பதவிகளுக்காகப் பேரம் பேசுவதில் முனைப்பு காட்டி, இலாகாக்களைப் பெற்று, அதிகார மமதையில் ஆடிய திமுக, நீட் தேர்வே வேண்டாம் என்பதில் ஆரம்பத்திலேயே முனைப்பு காட்டி இருக்கலாமே? ஆனால், அப்படிச் செய்யாமல் இருந்தது ஏன்? தங்களிடம் பதவியும் அதிகாரமும் இல்லாதபோது மட்டும் நீட் போன்ற மக்கள் பிரச்சனைகளில் முனைப்பு காட்டி, திமுக நீலிக்கண்ணீர் வடிப்பதை மக்கள் அறியாமலா இருக்கின்றனர்?
எல்லாவற்றையும்விடக் கொடுமை என்னவென்றால், டெல்லியில் நடக்கும் இளைஞர் போராட்டத்திற்கு ஏதோ ஒரு வகையில் தங்கள் ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்ள, திமுக செய்யும் தகிடுதத்த விளம்பர அரசியல், வேடிக்கையிலும் வேடிக்கை. அதைத் திரைப்பட வெளியீட்டோடு எல்லாம் தொடர்புப்படுத்தி, பொறாமையைக் காட்டுவது, திமுகவின் போதாமைக் காலமன்றி வேறென்ன?
சம்பந்தமில்லாத விசயங்களில்கூட மூக்கை நுழைத்து, மூக்கறுபட்டாலும், விளம்பரம் தேடி, விளம்பர மோகத்திலேயே ஊறிக் கிடக்கும் ஸ்டாலின் சாருக்கும் திமுகவுக்கும் இது ஒன்றும் புதிதில்லைதான்.
ஆட்சி, அதிகாரம், பதவி, பவிசு எல்லாம் பறிபோன பிறகு புனித வேடம் போடுவதில் திமுகவை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்பதை அகிலமே அறியும். ஆனால், இதை அறியாமல் திமுக தன் முகமூடியைத் தானே கழற்றிக்கொண்டு அம்பலப்பட்டு நிற்பதும் தொடர்கதைதான். என்ன செய்ய? விதி வலியதன்றோ?” என தவெக ஐ.டி.விங் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
English Summary
TVK has responded to MK Stalin for leaking the newspaper article