தவெக தலைவர் விஜய்யின் வேட்புமனுக்கள் ஏற்பு: திமுகவினர் கடும் எதிர்ப்பு...!
TVK Chief Vijays Nomination Officially Accepted Green Light for Electoral Debut in 2026
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் அவர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் இன்று (ஏப்ரல் 7, 2026) நடைபெற்ற ஆய்வுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் திமுகவினர் இதற்க்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர்.
சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் அவர் போட்டியிடுவது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அவரது அரசியல் பயணத்தில் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
திருத்தப்பட்ட மனு:
முன்னதாக, விஜய் தாக்கல் செய்த ஆரம்பக்கால வேட்புமனுக்களில் வயது, நிறுவனப் பங்குகள் மற்றும் அவரது மனைவி சங்கீதாவின் பெயரிலுள்ள வெள்ளி ஆபரணங்களின் மதிப்பு ஆகியவற்றில் சில குளறுபடிகள் இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதனால் அவரது மனுக்கள் நிராகரிக்கப்படலாம் என்ற அச்சம் தொண்டர்களிடையே நிலவியது.
இருப்பினும், சட்ட வல்லுநர்களின் ஆலோசனையின்படி, கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி இந்தத் தவறுகள் சரிசெய்யப்பட்டு, இரு தொகுதிகளிலும் திருத்தப்பட்ட புதிய வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இன்று நடைபெற்ற வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையின் போது, தேர்தல் அதிகாரிகள் இந்தத் திருத்தங்களை ஏற்றுக்கொண்டு, அவரது மனுக்கள் செல்லுபடியாகும் என அறிவித்தனர்.
அரசியல் களத்தில் அதிர்வலைகள்:
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளுமே ஆளும் திமுக-வின் பலமான கோட்டைகளாகக் கருதப்படுபவை. பெரம்பூரில் திமுக-வின் ஆர்.டி. சேகர் மற்றும் திருச்சி கிழக்கில் இனிகோ இருதயராஜ் ஆகியோரை எதிர்த்து விஜய் நேரடியாகக் களம் காண்கிறார். "யார் எதிர்த்தாலும் எங்கள் தலைவரின் வெற்றி உறுதி," என்று தவெக நிர்வாகிகள் உற்சாகத்துடன் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு விஜய்க்குப் பெரிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் விஜய்யின் சூறாவளிப் பிரசாரம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.
English Summary
TVK Chief Vijays Nomination Officially Accepted Green Light for Electoral Debut in 2026