பட்ஜெட் முடிந்த கையோடு டிடிவி.தினகரன் செய்த வேலை.. ஷாக்கான ஓ.பன்னீர்செல்வம்.!! - Seithipunal
Seithipunal


‘காற்றில் வரைந்த ஓவியம்’ போல செயல் திட்டமில்லாத வெற்று அறிவிப்புகள் கொண்ட பட்ஜெட் என டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தை கடனில் தத்தளிக்க வைத்திருப்பது ஆட்சியாளர்களின் திறமையின்மையையே காட்டுகிறது.
தெளிவான செயல் திட்டங்கள் இல்லாமல் போகிறபோக்கில் அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதன் மூலம் காற்றில் வரைந்த ஓவியமாக பழனிசாமி அரசின் பட்ஜெட் அமைந்திருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளிலும் நிதி நிலை அறிக்கைகள் வெறும் அறிவிப்புகளாக இருந்ததைப் போலவே, தங்களின் கடைசி முழு பட்ஜெட்டையும் இந்த ஆட்சியாளர்கள் தாக்கல்செய்துள்ளனர். இதில், தமிழக அரசின் கடன் 4லட்சத்து 56ஆயிரத்து 660 கோடியாக உயர்ந்திருப்பது கவலை அளிக்கிறது.

பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தின் திறனற்ற நிர்வாகத்தால் ஒவ்வொரு தமிழ்நாட்டு குடிமகனின் தலையிலும் சுமார் 57ஆயிரம் ரூபாய் கடன் சுமை ஏறியிருக்கிறது. 128 பக்கங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் இந்த
கடனை குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை.

தமிழக மக்கள் நலனுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என்று பழனிசாமி அரசு கூறிவரும் நிலையில், வரி விதிப்பில் மாநிலத்திற்கு வழங்கவேண்டிய நிதிப்பகிர்வுகளில் வரலாறு காணாத இறக்கம் ஏற்பட்டு தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் தமிழ்நாட்டின் நிதிநிலை சிக்கலாகி இருப்பதாகவும் பட்ஜெட்டில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அப்படியென்றால், நிதி கேட்பதாக சொல்லிக்கொண்டு அடிக்கடி டெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சர்களைசந்திக்கும் தமிழக அமைச்சர்கள் யாருடைய நலனுக்காக “இணக்கமாக” செயல்பட்டு எதைச் சாதித்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனவுத்திட்டமான அம்மா உணவகங்களை மொத்தமாகச் சீரழித்து பலப்பல இடங்களில் மூடுகிற நிலைக்கு கொண்டுவந்ததுடன் அதனை நாங்கள் பலமுறை சுட்டிக்காட்டியும்
கண்டுகொள்ளாத இந்த ஆட்சியாளர்கள், இப்போது தேர்தலுக்காக இத்திட்டத்திற்கு 100 கோடி நிதி ஒதுக்கியிருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கும் அறிவிப்பு குறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கை, செயல் திட்டம் பற்றி பட்ஜெட்டில் எதுவும் தெரிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. ஏனெனில் இப்படித்தான் நீட் தேர்வு விவகாரத்தில் சட்டம் கொண்டு வந்ததாகச் சொல்லி தமிழக மக்களை ஏமாற்றிய துரோக வரலாறு பழனிசாமி அரசுக்கு இருப்பதால் இதிலும் அப்படி ஏதாவது விளையாடிவிடுவார்களோ என்ற அச்சம் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் இருக்கிறது.

கரும்பு விவசாயத்திற்கான நுண்ணீர் பாசனத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் சர்க்கரை ஆலைகளிடமிருந்து கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் நிலுவைத்தொகையை பெற்றுத்தருவது பற்றியோ, இதனால் கரும்பு சாகுபடி செய்வதிலிருந்தே விவசாயிகள் வெளியேறுவதைத் தடுப்பது குறித்தோ எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அடையாறு மற்றும் கூவம் ஆறுகளை சீரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட ரூ. 1,160 கோடி நிதி என்ன ஆனது என்கிற விவரத்தை தெரிவிக்காமல், இதே திட்டத்திற்காக தற்போது ரூ.5,439கோடி ஒதுக்கியிருக்கிறார்கள். இந்த நிதியைக் கொண்டாவது அடையாற்றையும், கூவத்தையும் சீரமைப்பார்களா என்று பார்க்கலாம்.

கடந்த ஆண்டில் தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிக்கூடங்கள் மூடப்படுவதாக அரசின் கொள்கை விளக்க குறிப்பிலேயே அறிவிக்கப்பட்ட நிலையில், 9 மற்றும் 10ம் வகுப்பு இடைநிற்றலில் (School dropout) 100 % அதிகரித்திருப்பதாக மத்திய அரசு சமீபத்தில் கூறியிருந்தது.

ஆனால், இதையெல்லாம் மொத்தமாக மறைத்துவிட்டு பள்ளிக்கல்விக்கு அதிக அளவில் நிதி (34ஆயிரத்து 181கோடி) ஒதுக்கியிருப்பதாக பட்ஜெட்டில் தங்களுக்குத் தாங்களே பெருமைபொங்க சொல்லியிருப்பதைப் பார்த்து வேதனையோடு சிரிக்கத்தான் தோன்றுகிறது.

மத்திய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் கீழடியில் அகழாய்வு வைப்பகம் அமைப்பதற்கு 12.21கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இதனை உண்மையான அக்கறையோடு ஆட்சியாளர்கள் செயல்படுத்தவேண்டும்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக 5 இடங்களில் உயர் திறன் மேம்பாட்டு மையங்களை உருவாக்குவோம் என்ற கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பே இன்னும் செயல்பாட்டிற்கு வராத நிலையில், இப்போது புதிதாக மையங்கள் உருவாக்கப்படும் என அறிவித்திருப்பது இளைஞர்சமுதாயத்தை ஏமாற்றும் செயலாகும்.

நெருங்கிவரும் தேர்தலைக் கண்டு திறனற்ற ஆட்சியாளர்கள் எந்தஅளவிற்கு குழப்பத்திலும் பதற்றத்திலும் இருக்கிறார்கள் என்பதை காட்டும்வகையில் இந்த ஒட்டுமொத்த பட்ஜெட்டும் அமைந்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran says about budget


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->