என்டிஏ கூட்டணியில் டிடிவி தினகரன்: என்டிஏ பக்கம் டிடிவி தினகரன் ஒதுங்கியது ஏன்? ஆதரவாளர்கள் உடைத்த ரகசியம்
TTV Dinakaran in NDA alliance Why did TTV Dinakaran side with NDA The secret revealed by supporters
என்டிஏ கூட்டணிக்குள் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்திருப்பது, தமிழக அரசியலில் பல்வேறு கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது. நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பாஜக, தினகரனை என்டிஏ வளையத்துக்குள் கொண்டு வந்துள்ள நிலையில், இந்த முடிவு பாஜகவின் அரசியல் இலக்கை நிறைவேற்றியதாகக் கருதப்பட்டாலும், டிடிவி தினகரன் தனது தனித்த அரசியல் அடையாளத்தை இழக்கிறாரா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் வலுவடைந்துள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் அமமுக தனியாகப் போட்டியிட்டு, அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாதித்ததாக அரசியல் விமர்சகர்கள் மதிப்பிடுகின்றனர். குறிப்பாக, முக்குலத்தோர் வாக்கு வங்கி வலுவாக உள்ள டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில், அமமுக அதிமுகவுக்கு கடும் சவாலாக இருந்தது. ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோரை ஓரங்கட்டி, கொங்கு சமூகத்தை மையமாக வைத்து எடப்பாடி பழனிசாமி அதிமுகவை நகர்த்துகிறார் என்ற பிரச்சாரம், அந்தத் தேர்தலில் அமமுகவுக்கு சாதகமாக அமைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தேவர் சமூகத்தில் கணிசமான ஆதரவு கொண்ட டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு, அதிமுக–பாஜக கூட்டணியில் இணைந்திருப்பது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வரை எதிர் முகாமில் இருந்த அமமுகவும் அதிமுகவும், இன்று ஒரே மேடையில் நிற்பது நடைமுறையில் எவ்வளவு சாத்தியம் என்ற கேள்வி, அமமுக தொண்டர்களிடமிருந்தே எழுகிறது.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில அமமுக நிர்வாகிகள், தேர்தல் காலத்தில் கடுமையாக விமர்சித்தவர்கள், இப்போது ஒருவரின் வெற்றிக்காக இன்னொருவர் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்வார்களா? தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமைந்தால், தினகரனுக்கு அமைச்சர் பதவி வழங்க எடப்பாடி பழனிசாமி சம்மதிப்பாரா? என்ற சந்தேகங்களை முன்வைக்கின்றனர். மேலும், கடந்த தேர்தலில் அமமுக பெற்ற 2.3 சதவீத வாக்குகளில், எஸ்டிபிஐ போன்ற சிறு கட்சிகளின் பங்களிப்பும் இருந்தது. தற்போது பாஜக கூட்டணியில் இணைந்துள்ளதால், அந்தச் சிறுபான்மையினர் வாக்குகள் இந்த முறை அமமுக பக்கம் திரும்புமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
அதே நேரத்தில், அதிமுக கூட்டணியில் இணைந்திருப்பதன் மூலம் அமமுகவின் வாக்கு வங்கி உயரலாம், தினகரனுக்கு சட்டசபைக்குள் நுழையும் வாய்ப்பு கிடைக்கலாம் என்ற கணிப்புகளும் நிலவுகின்றன. ஆனால், தேர்தலுக்குப் பிறகு அமமுக தனது சுய அரசியல் பலத்தை இழந்து, ஒரு இணைப்புக் கட்சியாக சுருங்கிவிடும் அபாயம் இருப்பதாகவும் சில அரசியல் பார்வையாளர்கள் எச்சரிக்கின்றனர். ஒரு காலத்தில் தினகரனின் அருகில் இருந்த தங்கத் தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி போன்றோர் இன்று திமுகவில் அதிகார மையங்களில் இருப்பதை சுட்டிக்காட்டி, தினகரன் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், அதிமுகவுக்கு எதிரான அரசியலை வலுவாக முன்னெடுத்திருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
இதற்கு மாறாக, டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர்கள் இந்த முடிவை சரியான அரசியல் நகர்வாகவே பார்க்கின்றனர். அவர்களின் பார்வையில், தினகரன் சட்டசபைக்குள் நுழைவதும், அமமுக வாக்கு வங்கி உயர்வதும் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கும். எஸ்டிபிஐ கூட்டணியில் இருந்ததால் கிடைத்த சில வாக்குகள் இம்முறை கிடைக்காமல் போகலாம்; ஆனால் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் அதைவிட அதிகமாக அமமுகவுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது.
மேலும், தங்கத் தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி ஆகியோரின் அரசியல் நிலையை தினகரனுடன் ஒப்பிட முடியாது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். டிடிவி தினகரன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் வளர்ந்தவர், ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்து அதிமுகவில் அதிகார மையமாக செயல்பட்டவர். தனிப்பட்ட சமூக ஆதார வாக்கு வங்கியும், தனிக் கட்சியும் அவருக்கு உள்ளது. இந்தச் சூழலில், திமுக கூட்டணியில் தினகரன் இணைந்திருந்தால், “அரசியல் துரோகி” என்ற முத்திரை வலுப்பட்டிருக்கும் என்பதே அவர்களின் வாதம்.
அதனால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாரம்பரியத்தை முன்னிறுத்தும் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்திருப்பதே டிடிவி தினகரனின் சரியான அரசியல் முடிவு என்று அவரது ஆதரவாளர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.
English Summary
TTV Dinakaran in NDA alliance Why did TTV Dinakaran side with NDA The secret revealed by supporters