10 வருடம் திமுகவிற்காக உழைத்தும் பொறுப்பு கொடுக்காத விரக்தி; தவெகவில் இணைந்த காமராஜரின் குடும்ப வாரிசு..!
TSK Mayuri Kannan has joined the TVK party
திமுக, பாஜ உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய பலர், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று இணைத்துக் கொண்டனர். தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த இணைப்பு விழாவை தொடர்ந்து புதிய கட்சி உறுப்பினர்களுடன் நடிகர் விஜய் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அதன்படி, இன்று தவெகவில் இணைந்தவர்களில் சிலர் அரசியல் பின்னணி கொண்டவர்களாக உள்ளனர். அதில் முக்கியமானவர் டி.எஸ்.கே. மயூரி கண்ணன். இவர் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். அதாவது, காமராஜரின் தம்பி அண்ணாமலை நாடாரின் பேத்தி ஆவார்.
தொடக்கத்தில் பாஜ.வில் இருந்த மயூரி, அக்கட்சியில் இருந்து விலகி கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 02-ஆம் தேதி, ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தவர். அவருடன், காமராஜரின் இளைய சகோதரி மகள் சந்திரா, கண்ணன், ராஜாமணி ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.

திமுகவில் இருந்து விலகி, தற்போது தவெகவில் மயூரி இணைந்துள்ளார். அதன் பின்னர் அவர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;
இன்றைக்கு குடும்ப ஆட்சியை வேரோடு அறுக்கக்கூடிய இளைய தலைவராக மக்கள் அத்தனை பேரும் ஒரு மாற்றத்திற்கான தலைவராக இன்றைக்கு இருக்கக்கூடிய தவெக தலைவரை சந்தித்து கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளேன் என்றும், கோட்டையில் தவெக கொடி பறக்கும் என்பதே லட்சியம். வெற்றி நிச்சயம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், திமுகவில் 10 ஆண்டுகாலமாக எந்த பொறுப்பும் இல்லாமல் தான் பயணித்துக் கொண்டு இருந்ததாகவும், இன்றைக்கு இளைஞர்களின் விடிவெள்ளியாக இருக்கக்கூடிய ஒரு தலைவரை ஆதரிக்க வேண்டும் என்று தோன்றியது என்று கூறியுள்ளார்.
அதனால் நான் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், பொறுப்பை எதிர்பார்த்து நான் தவெகவில் சேரவில்லை என்றும், தான் ஒரு மூன்று தேர்தல்களில் வேலை பார்த்துள்ளதாகவும், விஜய் வெற்றிக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என்று மயூரி பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.

அதேபோன்று தவெகவில் இணைத்துக் கொண்ட மற்றொரு நபர் வி.ஆர். ராஜ்மோகன். இவர் பிரபல எழுத்தாளர் மற்றும் நடிகர் வேல. ராமமூர்த்தியின் மகன் ஆவார். ஓபிஎஸ் ஆதரவாளரான அவர், அதிமுக மீட்புக் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளராக இருந்தார்.
ஓபிஎஸ்சின் தீவிர விசுவாசியாக திகழ்ந்த அவர், பின்னர் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அங்கிருந்து விலகினார். இன்று தம்மை தவெகவில் இணைத்துக் கொண்டுள்ளார். இவர்கள் தவிர தலித் எழில்மலையின் மூன்றாவது மகள் கேத்ரின் தவெகவில் இணைந்துக்கொண்டுள்ளார்.
English Summary
TSK Mayuri Kannan has joined the TVK party