லாரி - கார் மோதல்...! பிடிக்க வந்த பொதுமக்களுக்கு பயந்து குளத்தில் குதித்த டிரைவர்...!
Truck car collision driver jumped into pond out fear public who came catch him
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் - களியக்காவிளை நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சுங்கான்கடை அருகே தோட்டியோட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனை சமாளிக்கும் வகையில் குளச்சல் போக்குவரத்து காவலர்கள் தொடர்ந்து வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.இந்நிலையில், தக்கலையில் இருந்து நாகர்கோவில் நோக்கி டாரஸ் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

தோட்டியோட்டில் மேம்பாலப் பணிகள் நடைபெறும் இடத்தை லாரி கடந்து சென்றபோது, எதிரே வந்த சொகுசு காருடன் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.லாரியும் காரும் மோதியதில் சொகுசு காரின் ஒரு பகுதி பலத்த சேதமடைந்தது.
அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.விபத்து ஏற்பட்டதை அறிந்ததும் அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் அங்கு திரண்டனர். காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில், விபத்துக்கு காரணமான லாரி டிரைவரிடம் அவர்கள் கடும் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் திரண்டு நின்று லாரி டிரைவரை கீழே இறங்குமாறு சத்தமிட்டனர். இதனால் பதற்றமடைந்த டிரைவர், தன்னை பொதுமக்கள் தாக்கிவிடக்கூடும் என அச்சமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து அவர் லாரியின் ஜன்னல் வழியாக வெளியேறி, பின்புறமாக ஓடிச் சென்று சாலையோரத்தில் இருந்த குளத்திற்குள் திடீரென குதித்தார்.லாரி டிரைவர் குளத்தில் குதித்ததை பார்த்த பொதுமக்கள், அவரை பிடிக்குமாறு சத்தமிட்டனர்.
இதனால் மேலும் பதற்றமடைந்த அவர், குளத்து நீரில் வேகமாக நீந்தி மறுகரையை அடைந்தார்.பின்னர் அங்கிருந்த புதர்களுக்குள் சென்று கரையேறிய அவர், அருகிலிருந்த தென்னந்தோப்பு வழியாக ஓட்டமும் நடையுமாக தப்பிச் செல்ல முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே அப்பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த குளச்சல் போக்குவரத்து காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தப்பிச் செல்ல முயன்ற லாரி டிரைவரை சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்தனர்.அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், லாரியை மது போதையில் இயக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விபத்தில் சிக்கிய லாரியும் சொகுசு காரும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து காவலர்கள் இரு வாகனங்களையும் அப்புறப்படுத்தி, சாலையில் வாகனப் போக்குவரத்தை சீரமைத்தனர்.
லாரி டிரைவர் பொதுமக்களிடம் சிக்காமல் இருப்பதற்காக ஜன்னல் வழியாக வெளியேறி குளத்திற்குள் குதித்து தப்பிச் செல்லும் காட்சியை அங்கிருந்த சிலர் தங்களது கைப்பேசிகளில் பதிவு செய்தனர்.தண்ணீரில் நீந்தி மறுகரைக்குச் சென்று தப்பிச் செல்ல முயன்ற காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
English Summary
Truck car collision driver jumped into pond out fear public who came catch him