ரூ. 20,000 கடனுக்காக மருத்துவமனை செல்ல தடுத்த மர வியாபாரி – கர்ப்பிணியும் குழந்தையும் பலி; தேமுதிக கண்டனம்! - Seithipunal
Seithipunal



காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் சிங்காடிவாக்கம் பழங்குடியினர் (இருளர்) காலனியைச் சேர்ந்த ஆனந்தன் (40) - தேன்மொழி (35) தம்பதியினர், வெள்ளகேட் பகுதியில் மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் தங்களது முதலாளியும் மரக்கிடங்கு உரிமையாளருமான ஆறுமுகம் என்பவரிடம் ரூ. 20,000 முன்பணக் கடனாகப் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், ஒன்பது மாத கர்ப்பிணியான தேன்மொழிக்குத் திடீரெனக் கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மருத்துவமனைக்குச் செல்லக் கூடாது என ஆறுமுகம் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மருத்துவ உதவி கிடைக்காமல் தங்கியிருந்த தார்ப்பாய் கொட்டகையிலேயே பிரசவம் நடந்ததில், தேன்மொழியும் அவரது பச்சிளம் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இக்கொடூர சம்பவம் தொடர்பாகத் தேன்மொழியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் பொன்னேரிக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கணவர் ஆனந்தன் மற்றும் மரக்கிடங்கு உரிமையாளர் ஆறுமுகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆறுமுகம் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்திற்குத் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனைக்குச் செல்ல விடாமல் தடுத்த செயல் மனிதாபிமானத்தையே கேள்விக்குறியாக்கும் கொடூரம் எனச் சாடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மர வியாபாரி ஆறுமுகம் உரிய நிவாரணமும் இழப்பீடும் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ள அவர், உயிரிழந்த தாய்க்கும் சேய்க்கும் தேமுதிக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragedy Near Kanchipuram Pregnant Woman and Newborn Die After Timber Merchant Blocks Hospital Visit Over Unpaid Loan DMDK Demands Strict Action


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->