தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசியல் கலகங்களுக்கும் திமுகதான் காரணம் - நயினார் பரபரப்பு பேட்டி!
TNBJP Nayinar Say About Tn Political clash
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். “தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசியல் கலகங்களுக்கும் திமுகதான் காரணம்” என அவர் குற்றஞ்சாட்டினார்.
செங்கோட்டையன் டெல்லி பயணத்தைப் பற்றி கேட்கப்பட்டபோது, “அது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. அவர் தனிப்பட்ட காரணத்திற்காகவே சென்றிருப்பார்” என்றார். மேலும், காங்கிரஸ் கட்சி ஆட்சிக் காலத்தில் பலமுறை மாநில அரசுகளை கலைத்ததாகவும், ஆனால் பாஜக கூட்டணிக் கட்சிகளை வலுப்படுத்தும் வழக்கையே பின்பற்றுவதாகவும் குறிப்பிட்டார்.
முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த அவர், “வெளிநாட்டிலிருந்து பெரிய முதலீடுகள் எதையும் கொண்டு வரவில்லை. ஏற்கெனவே இருந்த நிறுவனங்களையே மீண்டும் இணைத்துக் கொண்டுள்ளார்” என்றார். அதேசமயம், “எல்லா அதிமுகவினரும் ஒன்றிணைய வேண்டும். தேவைப்பட்டால் நான் சென்று பேசவும் தயாராக இருக்கிறேன்” என தெரிவித்தார்.
தூய்மைப் பணியாளர்களை நிரந்தரமாக்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தும், அதை நிறைவேற்றாத திமுக அரசை அவர் கடுமையாக விமர்சித்தார். “போராடுவோரையும் கேள்வி கேட்பவர்களையும் அடக்கும் அரசாக திமுக மாறியுள்ளது” என்றார். மேலும், பாஜக சிறுபான்மை அணியைச் சேர்ந்த வேலூர் இப்ராஹிம் மீது தவறான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டினார்.
குடியரசு துணை ஜனாதிபதி தேர்தலில், “தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார்” என நம்பிக்கை தெரிவித்தார்.
“அதிமுக கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து இருப்போம். ஆனால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை உடனடியாக சந்திக்க முடியாது. திமுக தூண்டுதலில்தான் இத்தகைய குழப்பங்கள் உருவாகின்றன” என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
English Summary
TNBJP Nayinar Say About Tn Political clash