திருமாவளவனுக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு: தமிழக அரசு விரிவான அறிக்கை அளிக்க ஆதிதிராவிடர் நல ஆணையம் உத்தரவு!
TN SC ST Commission Orders Detailed Report on Z Category Security for VCK Leader Thirumavalavan
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவனுக்கு 'இசட்' (Z) பிரிவுத் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்குவது மற்றும் உளுந்தூர்பேட்டை மாநாட்டில் நிகழ்ந்த பாதுகாப்பு மீறல் சம்பவம் குறித்து விரிவான விசாரணை அறிக்கையை அக்டோபர் 5-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்குத் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விசிக சார்பில் 'தமிழ் தேசிய எழுச்சி மாநாடு' நடைபெற்றது. மாநாட்டு மேடைக்குத் தலைவர் திருமாவளவன் வந்தபோது, அவரைக் சூழ்ந்துகொண்டு செல்ஃபி எடுக்க முயன்றவர்களின் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலால் அவருக்குக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கும் நிலை உருவானது. இதனால் அவர் தனது உரையை பாதியிலேயே முடித்துக்கொண்டு மேடையை விட்டு வெளியேறினார். இச்சம்பவம் சாதாரண நெரிசல் அல்ல, சமூக விரோதிகள் திட்டமிட்டு நடத்திய சதி என்ற சந்தேகத்துடன் கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசிக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ராஜேந்திரன் மற்றும் நெப்போலியன் ஆகியோர் மாநில ஆதிதிராவிடர் நல ஆணையத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அதில், உளுந்தூர்பேட்டை சம்பவத்தைச் சுட்டிக்காட்டி திருமாவளவனின் உயிர்ப்பாதுகாப்பை உறுதி செய்ய துப்பாக்கி ஏந்திய ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், மாநாட்டு மேடை நெரிசல் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இம்மனுவை விசாரித்த ஆணைய உறுப்பினர்கள் ஆனந்தராஜா மற்றும் இளஞ்செழியன் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. ஆகியோர் அக்டோபர் 5-ஆம் தேதிக்குள் முழுமையான விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
English Summary
TN SC ST Commission Orders Detailed Report on Z Category Security for VCK Leader Thirumavalavan