செந்தில் பாலாஜி வழக்கு: சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்க மாநில அரசுக்கே முழு அதிகாரம்; உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம்!
TN Govt Files Affidavit in Supreme Court in Senthil Balaji Case Asserts Sole Authority Over Special Public Prosecutor Appointment
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் போக்குவரத்துத் துறை வேலைவாய்ப்பு ஊழல் வழக்குகளில், சிறப்பு அரசு வழக்கறிஞரை (Special Public Prosecutor) நியமிக்கும் அதிகாரம் முற்றிலும் மாநில அரசின் நிர்வாக எல்லைக்குட்பட்டது எனத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு அரசு வழக்கறிஞர் பி. வாஷிங்டன் தனசேகரன் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக வி. செந்தில் முருகன் புதிய சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்துத் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள விளக்கப் பத்திரத்தில், "அரசுத் தரப்பு வழக்கறிஞர் மாநில அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி நீதியை நிலைநாட்டவே நியமிக்கப்படுகிறாரே தவிர, குற்றம்சாட்டப்பட்ட நபருக்குப் பயனளிக்கும் வகையில் நியமிக்கப்படுவதில்லை. எனவே, சிறப்பு அரசு வழக்கறிஞரைத் தேர்வு செய்வதிலோ அல்லது நியமிப்பதிலோ குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியமில்லை; அதில் உரிமை கோர அவருக்கு எந்தவிதச் சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லை" எனக் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், புதிய சிறப்பு வழக்கறிஞர் வி. செந்தில் முருகன் நியமிக்கப்பட்ட பிறகு, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளின் விசாரணையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் குறித்தும் பிரமாணப் பத்திரத்தில் விரிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த விளக்கத்தைப் பதிவு செய்துகொண்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் செப்டம்பர் 23-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.
English Summary
TN Govt Files Affidavit in Supreme Court in Senthil Balaji Case Asserts Sole Authority Over Special Public Prosecutor Appointment