சிறுதொழில்களின் கழுத்தை நெரிக்கும் செயல்; வணிக காஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்தாவிட்டால் போராட்டம்: மத்திய அரசுக்கு, செல்வப்பெருந்தகை எச்சரிக்கை..!
TN Congress warns the Central Government that it will stage protests if the hike in commercial gas cylinder prices is not controlled
'வணிக சிலிண்டர் விலை உயர்வு சிறுதொழில்களின் கழுத்தை நெரிக்கும் செயலாக உள்ளது. வணிக காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம்' என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;
''கடந்த 5 மாதங்களாக வணிகப் பயன்பாடு காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளும் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வணிக சிலிண்டர் விலை உயர்வு சிறுதொழில்களின் கழுத்தை நெரிக்கும் செயலாக உள்ளது.
இதற்கிடையே இன்று (ஜூன் 1) அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் உயர்வு ஆகியவற்றால், வணிக சிலிண்டரின் விலை கடந்த 5 மாதங்களில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. இதனால் உணவகங்கள், தேநீர்க் கடைகள், சிறு, குறு உணவுத் தொழில் செய்வோர் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
டீசல் விலை உயர்வு, சரக்கு போக்குவரத்துச் செலவுகளை உடனடியாக உயர்த்தும். இதன் நேரடி விளைவாக பால், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்து, சாமான்ய மக்கள் அன்றாட உணவுக்கே திண்டாடும் அவலநிலை ஏற்படும்.
எனவே, உயர்த்தப்பட்ட வணிக சிலிண்டர், பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலைகளை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள சிறு உணவகங்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு அரசு சிறப்பு மானியங்களை வழங்க வேண்டும். தொடர் விலையேற்றத்தை மத்திய அரசு உடனடியாகக் கட்டுப்படுத்தாவிட்டால், பொதுமக்களைத் திரட்டி, மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்படும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
TN Congress warns the Central Government that it will stage protests if the hike in commercial gas cylinder prices is not controlled