‘கட்டா குஸ்தி 2’ ரிலீஸ் எப்போது? ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!
When will Katta Kusthi 2 release The team has announced the release date
2022 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குடும்ப பின்னணியில் நகைச்சுவை, உணர்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை இணைத்து உருவான முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் வெற்றி கண்டது. இதையடுத்து அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாஸ், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடத்தப்பட்டு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது பின்னணி இசை, டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் வெளியான படத்தின் மேக்கிங் வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் ஜூலை 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் தற்போது பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அண்மையில் வெளியான அவரது படைப்புகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படமும் அதேபோன்று வெற்றி பெறும் என்ற நம்பிக்கை படக்குழுவினரிடம் உள்ளது.
முதல் பாகம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பது ஜூலை 3-ஆம் தேதி தெரியவரும்.
English Summary
When will Katta Kusthi 2 release The team has announced the release date