திருச்சியில் முதல்வர் விஜய் பேச்சு; ஏதோ 'அரசியல் புனிதர்' போலப் புளுகுமூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் என திமுக எதிர்வினை..!
DMKs Reaction to Vijays Maiden Speech in Trichy
இதுவரை தமிழ்நாடு அரசியலில் யாரும் செய்யத் துணியாத வகையில், இத்தனை அரசியல் தந்திரங்களையும், ஜனநாயக மாண்புக்கு எதிரான வேலைகளையும் செய்துவிட்டு, இப்போது திருச்சியில் ஏதோ 'அரசியல் புனிதர்' போலப் புளுகுமூட்டைகளை அவிழ்த்து விடுவதைப் பார்த்துத் தமிழ்நாடு சிரிக்கிறது.உங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்க, பிறர் மீது நீங்கள் பழிபோடும் தரமற்ற அரசியல் எங்கே?’ என முதல்வர் விஜய்யின் திருச்சி பேச்சுக்கு பின்னர் திமுக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
முதல்வர் விஜய்யை விமர்சித்து திமுக ஐடி விங்க் வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''தன்னை யாரோ ஆட்சியமைக்க விடாமல் தடுத்ததாகத் திருச்சியில் மேடையேறி முதலைக் கண்ணீர் வடிக்கிறார் முதல்வர் விஜய். உற்றுப் பார்த்தால், நாட்டின் அரசமைப்புச் சட்டம் (Constitution) என்றால் என்னவென்றே அவருக்குத் தெரியவில்லை என்பது அவரது பேச்சிலேயே அப்பட்டமாகத் தெரிகிறது.
உண்மையிலேயே உங்களுக்குத் திராணி இருந்தால், ஆளுநரிடம் நீங்கள் அளித்த உரிமைகோரல் கடிதங்களை முதலில் மக்கள் மன்றத்தில் வெளியிடுங்கள். எப்படியாவது பதவியைப் பிடித்துவிட வேண்டும் என்ற பதவி வெறியில் நீங்கள் அரங்கேற்றிய தகிடுதத்தங்களை நாடறியும்.
காரில் அரங்கேறிய அரசியல் அசிங்கம்:
அமமுக உறுப்பினர் காமராஜை காரில் வைத்து அவசரகதியில் கையெழுத்து வாங்கியதும், அந்தக் காணொளியை உங்கள் கட்சியினரே சமூக வலைத்தளங்களில் பரப்பி அது அம்பலமானதும் தான் உங்கள் நேர்மையா?
பச்சையான குதிரை பேரம்:
இதுவரை தமிழ்நாடு அரசியலில் யாரும் செய்யத் துணியாத வகையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு அதிமுகவின் ஒரு தரப்பினரைச் சந்தித்து, அவர்களைக் கொறடா உத்தரவை மீறி வாக்களிக்கச் செய்த திரைமறைவு வேலைகளைச் செய்தது யார்? இதுதான் நீங்கள் மேடைதோறும் முழங்கும் நேர்மையின் இலக்கணமா?
இத்தனை அரசியல் தந்திரங்களையும், ஜனநாயக மாண்புக்கு எதிரான வேலைகளையும் செய்துவிட்டு, இப்போது திருச்சியில் ஏதோ 'அரசியல் புனிதர்' போலப் புளுகுமூட்டைகளை அவிழ்த்து விடுவதைப் பார்த்துத் தமிழ்நாடு சிரிக்கிறது.
முதல் நாளே மக்கள் தீர்ப்பை மதித்து ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக திமுக செயல்படும் என்று நெஞ்சை நிமிர்த்தி, அதிகாரப்பூர்வமாக அறிவித்த எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலினின் அரசியல் அறம் எங்கே?
முதல்வர் நாற்காலியில் அமர்ந்த பின்பும் உங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்க, பிறர் மீது நீங்கள் பழிபோடும் தரமற்ற அரசியல் எங்கே?’ தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஐடி விங்கின் மற்றொரு பதிவில், ‘என்ன சார் செய்வது. ஆட்சிக்கு வந்து ஆறு நாள் கூட தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு நிர்வாகம் படு பாதாளத்தில் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை. இது பத்தாது என்று கரன்ட் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர்.
ஆனால், நீங்கள் முதல்வர் ஆனதையே மறந்துவிட்டு, வழக்கம் போல மேடை ஏறி திமுக மீது பழியைப் போட்டு ஒப்பாரி வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.
முதல்வர் நாற்காலி வேண்டும், ஆனால் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்றால் எப்படி சார்?
ஆளத் தெரியாமல் அடுத்தவர்கள் மேல் பழியைப் போட்டு தப்பிக்கப் பார்க்காதீர்கள். முதலில் போய் மக்கள் கொடுத்த வேலையைப் பாருங்கள் சிஎம் சார்'' என எதிர்வினையாற்றி பதிவிட்டுள்ளது.
English Summary
DMKs Reaction to Vijays Maiden Speech in Trichy