சோழவந்தானில் பரபரப்பு; அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு தலையில் வெட்டிய தவெக உறுப்பினர்..? தேடுதல் வேட்டையில் போலீசார்..!
Police launch a manhunt for a TVK member who hacked a government bus driver on the head in Sholavandan
சோழவந்தான் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரை தவெக பிரமுகர் ஒருவர் கத்தியால் வெட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10.40 மணிக்கு கடைசி நேர அரசு நகர பேருந்து சென்றுள்ளது. அதனை பிரசாத் என்பவர் ஓட்டியுள்ளார். பயணிகளை ஊரில் இறக்கி விட்டு சோழவந்தானுக்கு திரும்பியுள்ளது.
பேருந்து கருப்பட்டிக்கு அருகே சென்ற போது, 04 பேர் மெயின் ரோட்டின் குறுக்கே கார் ஒன்றை நிறுத்தி இருந்துள்ளனர். அப்போது காரை எடுக்கச் சொல்லி ஓட்டுநர் பிரசாத் அவர்களை எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது கருப்பட்டியைச் சேர்ந்த தங்கம் என்பவரின் மகன் தனுஷ்கோடி (45), பிரசாத்தை கத்தியால் தலையில் வெட்டியுள்ளார். அவருக்கு ரத்தம் கொட்டியது. அந்தப் பேருந்தில் பணியில் இருந்த நடத்துநர் மொக்கசாமி 108 ஆம்புலன்ஸை வரவழைத்து மதுரை அரசு மருத்துவமனையில் பிரசாத்தை அனுமதித்துள்ளார்.

இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனுஷ்கோடியை உடனே கைது செய்ய வலியுறுத்தியும், சோழவந்தான் அரசு பேருந்து பணிமனையில் 300-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பணிமனை ஊழியர்கள் இன்று காலை முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக சோழவந்தான் பணிமனையில் 55 அரசு பேருந்துகள் இயங்காமல் நிறுத்தப்பட்ட நிலையில், பணிக்குச் செல்வோர் உள்ளிட்ட பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து, அரசு போக்குவரத்து கழக மேலாளர்கள், போலீஸ் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியா நிலையில், ஓட்டுநரை தாக்கிய தனுஷ்கோடி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்துள்ளனர்.
இந்நிலையில், தனுஷ்கோடி மீது போலீஸார் வழக்குப் பதிவு அவரை தேடுகின்றனர். தனுஷ்கோடி மீது ஏற்கனவே, பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளார் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், தனுஷ்கோடி தவெக கட்சியில் உறுப்பினராக இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
English Summary
Police launch a manhunt for a TVK member who hacked a government bus driver on the head in Sholavandan