ஓட்டுக்கு பணம்... தமிழகம் முழுவதும் மொத்தம் 3000 கோடியை இறக்கும் திமுக - தமிழக பாஜக பரபரப்பு புகார்!
TN BJP Election 2026 DMK
தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுகவின் திராவிட மாடல் என்பது பிரேக் இல்லாத ஊழல் ரயில் போன்றது. இந்தியா முழுவதும் இதுபோன்ற ஊழல் ஆட்சிகளுக்கு பாஜக முடிவு கட்டி வருகிறது. 2026 தேர்தலில், மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்தி, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மோடி மாடல் டபுள் இன்ஜின் அரசு அமையும்.
இந்நிலையில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காகத் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் சேர்த்து சுமார் 2,000 கோடி ரூபாய்க்கும் மேல் திமுக பதுக்கி வைத்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.
குறிப்பாக, கொளத்தூர் தொகுதியில் மட்டும் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் 100 கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், திருவிடந்தையில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில், ஊழல் பணத்தை எப்படி விநியோகிப்பது என்பது குறித்து முதல்வர் முன்னிலையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழகம் வந்துள்ள இந்திய தேர்தல் துணை ஆணையர் மனிஷ் கார்க் தலைமையிலான குழுவினர், இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாநிலத்தின் தற்போதைய சூழலைத் தேர்தல் ஆணையத்திடம் விளக்கி, உரிய முறையில் ஆய்வு செய்து இந்தப் பணத்தைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.