கைது செய்யப்பட்ட வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் முஸ்லீம்களை அவரவர் நாட்டிற்கு அனுப்ப வேண்டும்! திருமாவளவன் கோரிக்கை!  - Seithipunal
Seithipunal


“இந்தியாவில் ஆன்மிகச் சுற்றுலா மேற்கொண்ட தப்லீக் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த 129 முஸ்லிம்கள் விசா விதிமுறைகளை மீறியதாகக் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் நீதிமன்றம் பிணை வழங்கி அவர்களைச் சொந்த நாட்டுக்குச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இதுவரை அவர்களைச் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்காமல் புழல் சிறையில் அவர்களைத் தமிழக அரசு அடைத்து வைத்திருக்கிறது. 129 முஸ்லிம்களையும் அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

ஒன்பது நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்த 12 பெண்கள் உள்ளிட்ட 129 முஸ்லிம்கள் மீது விசா விதிமுறைகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 98 பேருக்கு முதலில் பிணை வழங்கிய நீதிமன்றம் அவர்கள் தங்கள் இருப்பிடத்தைத் தெரிவித்துவிட்டு சென்னையில் சொந்தப் பொறுப்பில் தங்கி இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது.

இதனிடையில் எஞ்சியிருந்த 31 வெளிநாட்டவருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிணை வழங்கி இருக்கிறது. அவர்கள் கரோனா பரப்பியதற்கான ஆதாரம் எதுவும் இல்லையென்றும், விசா விதிமுறை மீறலுக்கான போதுமான அளவு தண்டனையை அவர்கள் அனுபவித்து விட்டார்கள் என்றும் கூறியுள்ள உயர் நீதிமன்றம், இதை ஒப்புக்கொண்டு அவர்கள் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தால் அவர்களது வழக்கை முடித்து அவர்களைச் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இவ்வாறு உத்தரவிட்ட பிறகும் கூட அவர்கள் அனைவரையும் விதிமுறைகளுக்கு மாறாக புழல் சிறையில் உள்ள தடுப்பு முகாமில் தமிழக அரசு தங்க வைத்துள்ளது. விசா விதிமுறைகளை மீறும் அயல்நாட்டவரைத் தடுப்பு முகாம்களில் தங்க வைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு 2019 ஜனவரியில் வெளியிட்டு இருக்கிறது. அதில் சிறை வளாகத்துக்குள் இத்தகைய தடுப்பு முகாம்கள் இருக்கக்கூடாது என்று குறிப்பாக அறிவுறுத்தியுள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவுக்கும், மத்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகளுக்கும் மாறாக தமிழக அரசு 129 முஸ்லிம்களையும் எந்த ஒரு வசதியும் இல்லாத தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்து தொடர்ந்தும் அவர்களைத் தண்டித்து வருகிறது. இது இஸ்லாமியர்கள் மீதான காழ்ப்புணர்வின் வெளிப்பாடோ என்ற ஐயம் நமக்கு ஏற்படுகிறது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 129 முஸ்லிம்களையும் அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையைத் தமிழக அரசு உடனே எடுக்க வேண்டும். அதுவரை அவர்களை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சென்னையில் உள்ள அரபுக் கல்லூரியிலோ அல்லது அதுபோன்றதொரு இடத்திலோ தங்க வைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirumavalavan request to Tamilnadu govt


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal