“விஜய்யை கூட்டணிக்கு இழுக்கும் அவசியமில்லை” – என்டிஏ குறித்து பியூஷ் கோயல் திட்டவட்ட விளக்கம்!
There is no need to drag Vijay into the alliance Piyush Goyal categorical explanation about NDA
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) தனது கூட்டணியை பலப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை (தவெக) கூட்டணியில் இணைக்க முயற்சி நடப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழலில், அந்தப் பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கமளித்துள்ளார்.
என்டிஏ கூட்டணியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்ததைத் தொடர்ந்து, கூட்டணியை மேலும் விரிவுபடுத்த பாஜக முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக, நடிகர் விஜய்யை கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், அதனால்தான் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தள்ளிப் போயுள்ளதாகவும் வதந்திகள் பரவின.
இந்த நிலையில், பியூஷ் கோயல் இந்த விவகாரம் குறித்து தெளிவாக மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
“தமிழக வெற்றி கழகத்தை கூட்டணிக்கு இழுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. சூப்பர் ஸ்டார்கள் வருவார்கள், போவார்கள். அதனால் அரசியலில் பெரிய தாக்கம் ஏற்படாது. திரை உலகில் ரசிகர்களை வைத்திருப்பதும், அதையே வாக்குகளாக மாற்ற முயற்சிப்பதும் இரண்டும் முற்றிலும் வேறுபட்ட விஷயங்கள். விஜய்யுடன் இதுவரை எந்த கூட்டணிப் பேச்சுவார்த்தையும் என்டிஏ நடத்தவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக அரசியல் சூழல் குறித்தும் அவர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
“தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. திமுகவின் ஊழல் மற்றும் தமிழ் விரோத கலாச்சாரத்தால், அந்தக் கட்சியின் மீது தமிழ்நாடு மக்கள் பெரும் வெறுப்படைந்துள்ளனர்” என்றும் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
இதன் மூலம், விஜய்யை கூட்டணியில் சேர்க்கும் எந்த திட்டமும் தற்போது இல்லை என்பதையும், என்டிஏ தனது சொந்த அரசியல் பலத்தையே நம்பி தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதையும் பாஜக தெளிவுபடுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
English Summary
There is no need to drag Vijay into the alliance Piyush Goyal categorical explanation about NDA