திமுக கூட்டணியில் இருந்தபோதும் இதே நிலை! தொடர்ந்து நாம் குறி வைக்கப்படுகிறோம் – விசிக தலைவர் திருமாவளவன் புலம்பல்!
The situation remains the same even while in the DMK alliance We are constantly being targeted VCK leader Thirumavalavan laments
விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவன், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கட்சியின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்த காலத்திலும், தற்போது தவெக ஆட்சி அமைந்த பிறகும் தங்கள் கட்சி விமர்சனங்களுக்கு உள்ளாகி வருவதாக அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில் பேசிய திருமாவளவன், "விசிக தற்போது இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்ட அங்கீகாரம் பெற்ற மாநிலக் கட்சியாக உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்த இயக்கமாகவும், பல்வேறு தரப்பினரின் நன்மதிப்பைப் பெற்ற கட்சியாகவும் வளர்ந்துள்ளோம். இதனால் இன்னும் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது" என்றார்.
மேலும், "திமுக கூட்டணியில் இருந்தபோதும் எங்களை விமர்சித்தவர்கள், இப்போது தவெக அரசில் இடம்பெற்ற நிலையிலும் தொடர்ந்து எங்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதன் மூலம் நாங்கள் இன்னும் அரசியல் ரீதியாக குறிவைக்கப்படுகிறோம் என்பதே தெரிகிறது. எங்களை பலவீனப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இதை மனதில் கொண்டு அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
விசிக செயல்படும் அரசியல் களத்தை வேறு யாராலும் ஆக்கிரமிக்க முடியாது என்றும், தற்போதைய அரசியல் மாற்றங்களுக்கிடையிலும் தங்களது கட்சி தவிர்க்க முடியாத மற்றும் தீர்மானிக்கும் அரசியல் சக்தியாக செயல்பட்டு வருவதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விசிக, எட்டு தொகுதிகளில் களமிறங்கி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. பின்னர், தவெக தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்ததுடன், அக்கட்சி சார்பில் வன்னி அரசு சமூகநீதி துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
இதற்கிடையில், விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஒரு தொகுதியை விசிகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி தரப்பில் தவெக தலைமையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுகுறித்து தவெக அல்லது விசிக தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
English Summary
The situation remains the same even while in the DMK alliance We are constantly being targeted VCK leader Thirumavalavan laments