முதல்வர் விஜயின் தனிச்செயலராக ‘தி ரூட்’ ஜெகதீஷ் பழனிசாமி! மறைக்கப்பட்ட அரசாணை? பாயிண்டை பிடித்த இடும்பை கார்த்திக்!
The Route Jagadish Palanisamy as Chief Minister Vijay Personal Secretary A concealed Government Order Idumbai Karthik spots the key point
தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொருளாளரான ஜெகதீஷ் பழனிசாமி, தமிழக முதல்வர் விஜயின் அரசியல் பிரிவு தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மே 12ஆம் தேதி முதல் இந்த நியமனம் அமலுக்கு வந்திருந்தாலும், அதற்கான அரசாணை தற்போது வெளியாகியிருப்பது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர் வெளியிட்டுள்ள அரசாணையில், ஜெகதீஷ் பழனிசாமி முதல்வரின் அரசியல் பிரிவு தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது பணிநிபந்தனைகள் மற்றும் பிற விதிமுறைகள் தனியாக அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெகதீஷ் பழனிசாமி, நடிகர் விஜயின் சினிமா வாழ்க்கை முதல் அரசியல் பயணம் வரை கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் நெருக்கமாக செயல்பட்டு வருபவர் என அறியப்படுகிறார். ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பு, நிகழ்ச்சி மேலாண்மை, தேர்தல் வியூகம், தரவு சேகரிப்பு, களப்பணி ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை மேற்கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரம் மற்றும் டிஜிட்டல் அரசியல் நடவடிக்கைகளில் அவர் முக்கிய பங்கு வகித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஆட்சி அமைந்த பிறகு அவருக்கு முக்கிய நிர்வாகப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
முதல்வரின் அரசியல் பிரிவு தனிச் செயலாளர் பதவி என்பது அரசியல் மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பில் முக்கிய பங்காற்றும் பொறுப்பாக கருதப்படுகிறது. அரசு மற்றும் கட்சி இடையேயான தொடர்பு, அரசியல் ஆலோசனைகள், முக்கிய நிகழ்வுகளின் திட்டமிடல் போன்ற பணிகளில் இந்தப் பதவிக்கு முக்கியத்துவம் உண்டு.
இதனால், ஜெகதீஷ் பழனிசாமியின் செல்வாக்கு அரசு நிர்வாகத்திலும் அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்த நியமனம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இடும்பவனம் கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஜெகதீஷ் பழனிசாமி நியமனத்திற்கான அரசாணை எண் 674 என்றும், ரத்தன் பண்டிட் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட அரசாணை எண் 675 என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"இரண்டு அரசாணைகளும் ஒரே தேதியில் அடுத்தடுத்த எண்களில் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் ஜெகதீஷ் பழனிசாமியின் நியமன அரசாணை மட்டும் உடனடியாக வெளியிடப்படாமல், சுமார் 40 நாட்கள் கழித்து தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முதல்வரின் தனிச்செயலர் நியமனத்தை ஏன் மறைக்க வேண்டும்? இதுதானா வெளிப்படையான நிர்வாகம்?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு முன்பு, முதல்வரின் அரசியல் பிரிவில் சிறப்பு பணியாளர் அதிகாரியாக ரத்தன் பண்டிட் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஜோதிடர் என்ற அடையாளத்துடன் இருந்த அவரது நியமனம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த நியமனம் திரும்பப் பெறப்பட்டது.
அந்த சர்ச்சை முழுமையாக அடங்காத நிலையில், தற்போது ஜெகதீஷ் பழனிசாமியின் நியமனம் மற்றும் அரசாணை வெளியீட்டில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக புதிய அரசியல் விவாதங்கள் உருவாகியுள்ளன.
இந்த விவகாரம் குறித்து அரசு அல்லது தமிழக வெற்றிக் கழகத் தலைமையிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
English Summary
The Route Jagadish Palanisamy as Chief Minister Vijay Personal Secretary A concealed Government Order Idumbai Karthik spots the key point