தவெகவில் அதிகரிக்கும் உட்கட்சி மோதல்: மாவட்ட செயலாளர்கள் - எம்எல்ஏக்கள் இடையே அதிகாரப் போட்டி?நடப்பது என்ன?
Rising internal conflict in TVK A power struggle between district secretaries and MLAs What is happening
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியை கைப்பற்றிய பிறகு கட்சியின் வளர்ச்சி வேகமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் உட்கட்சி மோதல்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களாக உயர்ந்தவர்களுக்கும், கட்சியின் தொடக்க காலம் முதல் களத்தில் உழைத்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலின்போது மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்த பல முக்கிய தலைவர்களுக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்து வந்த சில மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிருப்தியடைந்ததாக கூறப்படுகிறது.
தேர்தலில் வெற்றி பெற்ற புதிய முகங்களில் சிலர் அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல மாவட்டங்களில் அதிகார மையங்கள் மாறத் தொடங்கியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி மாவட்டத்தில் இந்த பிரச்சினை வெளிப்படையாக தெரிந்ததாக கூறப்படுகிறது. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் அருள்ராஜுக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படாமல், திமுகவில் இருந்து வந்த விஜி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் பின்னர் ஆடியோ சர்ச்சையாக மாறி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் கீர்த்தனாவுக்கும் மாவட்ட செயலாளர் மாரிசெல்வத்துக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வந்த கருத்து வேறுபாடு தற்போது வெளிப்படையான மோதலாக மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இரு தரப்பினரும் தனித்தனியாக செயல்பட்டதாகவும், ஆதரவாளர்களுக்கு இடையே நேரடி மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சென்னையிலும் இதேபோன்ற சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. தேர்தலில் வாய்ப்பு கிடைக்காத சில மாவட்ட நிர்வாகிகள் தற்போது அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஆதிக்கம் செலுத்துவதாக கருதி அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில இடங்களில் கட்சி நிகழ்ச்சிகளுக்கு ஒருவரை ஒருவர் அழைக்காத நிலையும் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் போஸ்டர், பேனர், பொதுக்கூட்ட ஏற்பாடுகள் உள்ளிட்ட விஷயங்களிலும் போட்டி மனப்பான்மை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம், வேலூர், கோவை, நாமக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இதேபோன்ற உட்கட்சி முரண்பாடுகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
பழைய நிர்வாகிகள், மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். அதேநேரத்தில், புதியவர்கள் தங்களது வெற்றிக்கு மக்கள் ஆதரவே காரணம் என வாதிடுவதாக கூறப்படுகிறது.
ஆட்சிக்கு வந்த பிறகு எந்த அரசியல் கட்சியிலும் அதிகாரப் போட்டிகள் உருவாகுவது இயல்பானதுதான். ஆனால் அவற்றை சரியான நேரத்தில் கட்டுப்படுத்த தவறினால், அது கட்சியின் எதிர்கால வளர்ச்சியை பாதிக்கக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மாவட்ட அளவிலான ஒற்றுமை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் இடையே உருவாகியுள்ள முரண்பாடுகளை கட்சித் தலைவர் மற்றும் முதல்வர் விஜய் எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்பது அரசியல் வட்டாரங்களில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஆட்சியை கைப்பற்றிய சில மாதங்களிலேயே பல மாவட்டங்களில் உட்கட்சி பூசல் வெளிப்படையாக பேசப்படும் நிலை உருவாகியிருப்பது, தவெக தலைமைக்கு புதிய சவாலாக மாறியுள்ளது.
English Summary
Rising internal conflict in TVK A power struggle between district secretaries and MLAs What is happening